தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: விசாரணை அறிக்கை செப்டம்பர் 16-ந் தேதி தாக்கல் ஐகோர்ட்டில், சி.பி.ஐ. தகவல்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: விசாரணை அறிக்கை செப்டம்பர் 16-ந் தேதி தாக்கல் ஐகோர்ட்டில், சி.பி.ஐ. தகவல்
x
தினத்தந்தி 27 Aug 2019 10:41 PM GMT (Updated: 27 Aug 2019 10:41 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வழக்குகள் குறித்த விசாரணை அறிக்கை அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில், சி.பி.ஐ. தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.ஐ. நடத்தி வரும் விசாரணையின் நிலை என்ன? நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் நிலை என்ன?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போலீசார் பதிவு செய்த 207 வழக்குகளும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது’ என்றார்.

விசாரணை அறிக்கை

மேலும் அவர், ‘கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரி, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் இருந்து ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கேமரா பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. இந்த விசாரணை விவரங்களை கொண்ட நிலை அறிக்கையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்வார்கள். துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கலவரத்தில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் பங்கு, போராட்டக்காரர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

365 சாட்சிகள்

இதையடுத்து தமிழக அரசு சார்பில் அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த சூழ்நிலை, காரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந் தேதி அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் பதவி காலத்தை 2020-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி வரை நீட்டித்து கடந்த 20-ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆணையம் இதுவரை 365 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது. 550 ஆவணங்களை சாட்சியாக எடுத்துள்ளன. மேலும் 465 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், தற்போது விசாரணை எந்த நிலையில் உள்ளது? என்பது குறித்த விரிவான அறிக்கையை ஆணையத்தின் செயலாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Next Story