குண்டு வெடித்ததில் 2 பேர் பலியான சம்பவம் வெடிகுண்டு நிபுணர்கள் 3-வது நாளாக சோதனை


குண்டு வெடித்ததில் 2 பேர் பலியான சம்பவம் வெடிகுண்டு நிபுணர்கள் 3-வது நாளாக சோதனை
x
தினத்தந்தி 27 Aug 2019 10:59 PM GMT (Updated: 27 Aug 2019 10:59 PM GMT)

திருப்போரூர் அருகே குண்டு வெடித்து 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக 3-வது நாளாக நேற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி கிராமத்தில் கங்கையம்மன் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடித்து சிதறியதில் கூவத்தூர் பகுதியை சேர்ந்த சூர்யா மற்றும் மானாமதி பகுதியை சேர்ந்த திலீபன் (வயது 23) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். 4 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அந்த பகுதியில் இருந்து மேலும் ஒரு வெடிகுண்டு நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. அதை கைப்பற்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். நேற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் சோதனை 3-வது நாளாக தொடர்ந்தது.

கங்கையம்மன் கோவில் அருகே ரபீக் கான் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். மானாமதி பஸ் நிலையம் அருகே இருப்புக்கடை நடத்தி வந்த ரபீக்கான் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அங்கிருந்து வீடு மாற்றிக்கொண்டு திருக்கழுகுன்றத்தில் தங்கி மானாமதியில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை நடத்தி வந்தார்.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

பழைய பொருட்களில் ஏதேனும் வெடிபொருள் சிக்கியிருக்குமா என்ற கோணத்தில் சந்தேகத்தின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் ரபீக் கானை அழைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ரபீக் கானின் கடையில் மோப்ப நாயுடன் சென்று வேறு ஏதேனும் வெடிகுண்டு இருக்குமா? என்ற கோணத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவரது வாடகை வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் காஞ்சீபுரம் வெடிகுண்டு நிபுணர்கள் கங்கையம்மன் கோவில் அருகே கண்டெடுத்த வெடிகுண்டை நேற்று செங்கல்பட்டு நீதிபதியின் வாய்மொழியாக கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் மானாமதி ஏரியான பெரியார் நகர் பகுதி அருகே ஏரியின் நடுவில் யாரும் இல்லாத இடத்தில் வெடிக்க செய்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர்.

செயலிழக்க செய்யும் பணி நிறுத்தம்

பணிகள் முடியும் தருவாயில் இருக்கும்போது செங்கல்பட்டு நீதிபதியின் உத்தரவு எழுத்து மூலம் கிடைக்காததால் டி.ஜி.பி உத்தரவின்பேரில் செயலிழக்க செய்வதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

நீதிபதி அந்த பொருளை பார்க்காமல் உத்தரவு வழங்கமுடியாது. நேரில் கொண்டுவரும்படி கூறியதால் அதை செங்கல்பட்டு கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர். நீதிபதி அந்த குண்டை நேரில் பார்வையிட்டார். பின்னர் அந்த குண்டு சென்னை கிரீம்ஸ் சாலை மருதம் கமாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டு அங்குள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story