14 நாட்கள் சுற்றுப்பயணம் தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநாடு பயணம்


14 நாட்கள் சுற்றுப்பயணம் தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநாடு பயணம்
x
தினத்தந்தி 28 Aug 2019 12:15 AM GMT (Updated: 27 Aug 2019 11:30 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) வெளிநாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.

சென்னை,

தொழில்துறையில் தமிழகத்தை முன்னேற்ற மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் முக்கிய அம்சமாக வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டது.

14 நாட்கள் பயணம்

இதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி வரை 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

இன்று லண்டன் பயணம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் துபாய்க்கு செல்கிறார். பிற்பகல் 12.55 மணிக்கு துபாய் செல்லும் அவர், அங்கிருந்து பிற்பகல் 2.15 மணிக்கு லண்டனுக்கு விமானம் மூலம் புறப்படுகிறார். இந்த விமானம் லண்டனை மாலை 6.40 மணிக்கு சென்றடைகிறது.

லண்டனில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் களின் பணித்தர மேம்பாடுகள் தொடர்பாக சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆஸ்பத்திரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுகிறார். இங்கிலாந்தின் அவசர ஆம்புலன்ஸ் சேவை மற்றும் சக்போல்க் நகரில் உள்ள ‘ஐ.பி. சுவிட்ச் ஸ்மார்ட் கிரிட்’ நிறுவனத்தை பார்வையிடுகிறார். அந்நாட்டு எம்.பி.க்களையும் சந்தித்து பேசுகிறார். இந்துஜா உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் அதிபர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

லண்டன் பயணம் முடிந்து...

லண்டன் பயணத்தை முடித்து, செப்டம்பர் 1-ந்தேதி மாலை அமெரிக்காவுக்கு விமானத்தில் எடப்பாடி பழனி சாமி புறப்படுகிறார். இரவு 7.59 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரை அடைகிறார்.

2-ந்தேதி காலை 8.10 மணிக்கு நியூயார்க்கில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, காலை 9.40 மணிக்கு பபல்லோ நகரை சென்றடைகிறார்.

3-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் நியூயார்க் நகருக்கு புறப்படுகிறார். காலை 10.55 மணிக்கு நியூயார்க் சென்றடைகிறார். மாலை 6 மணிக்கு முதலீட்டாளர்கள் மற்றும் இரவு 7.30 மணிக்கு தமிழ் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

10-ந்தேதி சென்னை திரும்புகிறார்

4-ந்தேதி காலை 9.30 மணிக்கு நியூயார்க் நகரில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 12.50 மணிக்கு சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைகிறார். அங்குள்ள ‘ப்ளூம் எனர்ஜி’ நிறுவனத்தை பார்வையிடுகிறார்.

5-ந்தேதி காலை டெஸ்லா இ.வி. பேக்டரி, பகலில் யு.சி. டேவிஸ் பண்ணை ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு மீண்டும் சான்பிரான்சிஸ்கோவுக்கு திரும்புகிறார்.

6-ந்தேதி காலை 8 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு காலை 9.30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ்-க்கு வருகிறார். அங்குள்ள ஓட்டலில் தங்குகிறார். 7-ந்தேதி மாலை 4.40 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு புறப்படுகிறார். 8-ந்தேதி மாலை 7.40 மணிக்கு துபாய் வருகிறார். 9-ந்தேதி நள்ளிரவு 2.45 மணிக்கு துபாயில் இருந்து விமானத்தில் புறப்படும் எடப்பாடி பழனிசாமி, 10-ந்தேதி சென்னை வந்தடைகிறார்.

பொறுப்பு ஒப்படைப்பு இல்லை

வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாரிடமும் தனது பொறுப்புகளை ஒப்படைத்து செல்லவில்லை. வெளிநாடுகளில் இருந்தாலும் தொலைபேசி, லேப்-டாப் உதவியுடனும் மற்றும் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும் எல்லா பணிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார்.

பிரதமர் நரேந்திரமோடி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும்போதும் சரி, சமீபத்தில் ஆந்திரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெளிநாடு பயணம் மேற்கொண்டபோதும் சரி யாரிடமும் தங்களது பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களும், அதிகாரிகளும்...

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் லண்டனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் உடன் செல்கிறார்கள்.

லண்டனில் சுகாதாரத்துறை தொடர்பான சந்திப்புகள் நிறைவடைந்ததும் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அங்கிருந்து சென்னை திரும்புகிறார். இந்தநிலையில் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சென்னையில் இருந்து நேரடியாக அமெரிக்கா சென்று, முதல்-அமைச்சர் குழுவில் ஐக்கியமாகின்றனர். இந்த பயணத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அவருடைய தனி செயலாளர்கள் சாய் குமார், எஸ்.விஜயகுமார், செந்தில்குமார், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், கால்நடைத்துறை செயலாளர் டாக்டர் கோபால், தொழில்துறை செயலாளர் முருகானந்தம் மற்றும் துறை செயலாளர்கள் உடன் செல்கின்றனர்.

ஆலோசனைகள்

வெளிநாட்டு பயணத்தில் தன்னுடன் வரும் அரசு செயலாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அழைத்து ஆலோசனை நடத்தினார்.

Next Story