வருமான வரித்துறை வழக்கில் பிடிவாரண்டு: எழும்பூர் கோர்ட்டில் நடிகர் விஷால் சரண் சமாதானமாக செல்ல விருப்பமா? என நீதிபதி கேள்வி


வருமான வரித்துறை வழக்கில் பிடிவாரண்டு: எழும்பூர் கோர்ட்டில் நடிகர் விஷால் சரண் சமாதானமாக செல்ல விருப்பமா? என நீதிபதி கேள்வி
x
தினத்தந்தி 28 Aug 2019 9:30 PM GMT (Updated: 2019-08-29T01:13:46+05:30)

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதால் நேற்று அவர் எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

சென்னை, 

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதால் நேற்று அவர் எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த விவகாரத்தில் சமாதானமாக செல்வது குறித்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி விஷால் தனது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வரி பிடித்தம்

சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிறுவனம் பல்வேறு நபர்களுக்கு வழங்கிய சம்பளத்துக்கு வரி பிடித்தம் செய்தது. ஆனால் பிடித்தம் செய்த வரித்தொகை சுமார் ரூ.4 கோடியை நிறுவன உரிமையாளர் என்ற அடிப்படையில் வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் விஷால் செலுத்தவில்லையாம்.

பிடிவாரண்டு

இதுகுறித்து வருமான வரித்துறை, விஷாலுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வருமான வரித்துறை அதிகாரிகள் எழும்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் விஷாலுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டில் சரண்

இந்தநிலையில் நீதிபதி மலர்மதி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது காலை 10.30 மணிக்கு நடிகர் விஷால் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

அப்போது அவரது தரப்பில் ஆஜரான வக்கீல், விஷால் ஆஜராகாததற்கான காரணத்தை கூறி அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெறக்கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை மதியம் 12.45 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார். பிடிவாரண்டு உத்தரவு அடிப்படையில் அவர் சரண் அடைந்த காரணத்தால் கோர்ட்டு அறையில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக அவர் கோர்ட்டு அறையில் நின்று கொண்டே இருந்தார்.

சமாதானமாக செல்ல விருப்பமா?

இதன் பின்னர் மதியம் 12.45 மணிக்கு மனுவை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அப்போது விஷாலுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்ப பெறுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி (விஷாலை பார்த்து), ‘இந்த வழக்கில் சமாதானமாக செல்ல விரும்புகிறீர்களா?, அவ்வாறு சமாதானமாக செல்வதாக இருந்தால் உங்களது ஆடிட்டரை கலந்து ஆலோசித்து அதுதொடர்பான மனுவை வருமான வரித்துறையில் தாக்கல் செய்து விட்டு தெரிவியுங்கள். இல்லையென்றால் வழக்கை தொடர்ந்து நடத்துவது குறித்து தெரிவியுங்கள். வழக்கு விசாரணை செப்டம்பர் 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

Next Story