13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க ஐகோர்ட்டு தடை


13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க ஐகோர்ட்டு தடை
x
தினத்தந்தி 28 Aug 2019 9:30 PM GMT (Updated: 2019-08-29T01:22:14+05:30)

13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மதுரை, 

ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைகுட்டத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை கிராமத்தை சுற்றி ஜமீன்தார் வலசை, தமிழர்வாடி சமத்துவபுரம், சித்தார்கோட்டை, குலசேகரன்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து 800 முதல் ஆயிரம் மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள். விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டவர்கள்.

சட்ட விரோதமாக இந்த கிராமங்களில் மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இது கனிம வள விதிகளுக்கு எதிரானது. அனுமதி பெற்ற அளவை காட்டிலும் 15 அடி வரை கூடுதலாக ஆழம் தோண்டி மணல் எடுக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு கடல்நீர் ஊருக்குள் புகுந்துவிடும் நிலை உள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் தொடர்ந்து பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. எனவே ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைகுட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தடுக்க வேண்டும்

இதேபோல, கிராமங்களில் சவுடு மண் அல்லது களிமண் எடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை பயன்படுத்தி சில குவாரி உரிமையாளர்கள், சவுடு மண்ணுக்கு கீழ் உள்ள ஆற்று மணலை சட்ட விரோதமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். 24 மணிநேரமும், நூற்றுக்கணக்கான லாரிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுக்கப்படுகிறது. இதனால் ஆற்றின் இயற்கையான போக்கு, பாதை மாறுகிறது. அதோடு கடல்நீர் ஊருக்குள் புகுந்து அழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே கடலாடி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் சவுடு மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாக மணல் எடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இடைக்கால தடை

இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், “சவுடு மண், மணல் எடுப்பது தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை கோர்ட்டுகள் வழங்கியுள்ளன. ஆனாலும் அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. எனவே மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 13 மாவட்டங்களிலும் சவுடு மண் அள்ள அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அனுமதி வழங்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கி இருந்தால், அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளனர். இந்த வழக்கை அக்டோபர் மாதம் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த உத்தரவை தொடர்ந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story