அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு கட்டிட அனுமதியை ஆன்லைனில் பெறலாம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு கட்டிட அனுமதியை ஆன்லைனில் பெறலாம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 28 Aug 2019 9:45 PM GMT (Updated: 28 Aug 2019 8:02 PM GMT)

‘தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கான அனுமதியை ஆன்லைனில் பெறலாம்’ என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர்-கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டத்தை தொடர்ந்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு களஆய்வு இல்லாமல் எளிய முறையில் ஆவணங்களின் அடிப்படையில் இணையதளம் (ஆன்லைன்) வாயிலாக உடனடியாக கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி வழங்கப்படும். அனுமதி பெற்ற மனைப்பிரிவுகளில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

இட ஆய்வு தேவையில்லை

கட்டப்படும் கட்டிடங்கள் இட ஆய்வு செய்யத்தேவையின்றி ஆவணங்களின் அடிப்படையில் கட்டணங்கள் செலுத்திடலாம். கட்டணம் வசூலித்த பின், மழைநீர் சேகரிப்பு உத்தேசங்கள் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து, இணையதளம் வழியாக டிஜிட்டல் ஒப்பத்துடன் கூடிய வரைபடம் மற்றும் அனுமதி உத்தரவு வழங்கப்படும்.

கட்டிட அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டினாலோ அல்லது விதிகளை மீறி தவறான ஆவணங்களின் அடிப்படையில் அனுமதி பெற்றுள்ளது தெரியவந்தாலோ கட்டிட அனுமதி ரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட பதிவு பெற்ற பொறியாளரின் உரிமம் ரத்து செய்யப்படும். குற்றவியல் நடவடிக்கை உள்பட அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அனைத்து சேவைகளும் இணையதளம் மூலமாக பொதுமக்களின் வீடு தேடி சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள், கட்டிட வரைபட அனுமதி, மனைப்பிரிவு அங்கீகார அனுமதி, வணிகம் நடத்த தொழில் உரிம அனுமதியை இணையதளம் மூலம் பெறலாம்.

அலுவலகத்தை தேடி செல்லாமல்...

சொத்துவரி, தொழில்வரி, வரியில்லா இனங்கள், குடிநீர்-பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் வணிக உரிம கட்டணத்தையும் இணையதளம் மூலம் செலுத்தலாம். புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர்-பாதாள சாக்கடை இணைப்புப் பெறுதல், புதிய வணிக உரிமம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல், சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றம் செய்தல் போன்ற சேவைகளுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவே விண்ணப்பித்து தீர்வு பெறலாம்.

புகார்கள் தெரிவிக்க பொதுமக்கள் இனி அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல், இணையதளம் மூலமாகவே தெரிவிக்கலாம். பொதுமக்களை அலைக்கழிப்பது குறித்து புகார்கள் வரப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் சேவையை பெற https://tnur-b-a-n-e-p-ay.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story