மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Aug 2019 8:06 PM GMT (Updated: 28 Aug 2019 8:06 PM GMT)

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, 15 நாட்கள் ஆகியும் காவிரி பாசன மாவட்டங்களில் இன்னும் சம்பா நெல் நடவுப் பணிகள் தொடங்கவில்லை.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு, 15 நாட்கள் ஆகியும் காவிரி பாசன மாவட்டங்களில் இன்னும் சம்பா நெல் நடவுப் பணிகள் தொடங்கவில்லை. காவிரி கடைமடை பாசனப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையாதது தான் இந்த தாமதத்திற்கு காரணம் என்பதும், இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பதும் வருத்தம் அளிக்கிறது.

இதற்கு காரணம், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் மிகவும் குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்படுவதும், கிளை ஆறுகள் முழுமையாக தூர்வாரப்படாததும் தான் என்று கூறப்படுகிறது. கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்தால் மட்டும் தான் நேரடி விதைப்பு அல்லது நாற்று நடவு மூலம் சம்பா சாகுபடியைத் தொடங்குவது சாத்தியமாகும். எனவே, சம்பா சாகுபடி குறித்த காலத்தில் தொடங்க வேண்டும் என்றால் கடைமடை பாசனப் பகுதிகளை தண்ணீர் விரைவாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் கர்நாடகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. நடப்பு சம்பா பருவ சாகுபடி நிறைவாக நடந்தால் தான் விவசாயிகள் கடன் சுமையிலிருந்து ஓரளவாவது மீள முடியும். அதற்கு வசதியாக கடைமடை பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடைய வசதியாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story