வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் துணை முதல் அமைச்சர்


வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் துணை முதல் அமைச்சர்
x
தினத்தந்தி 29 Aug 2019 1:04 PM GMT (Updated: 29 Aug 2019 1:04 PM GMT)

வேளாண்மை, குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.

தேனி,

தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தின் நீர்நிலைகளில் பரவலாக நீர் நிரம்பியது.  இதேபோன்று கர்நாடகாவில் உள்ள கபினி உள்ளிட்ட அணைகளில் நிரம்பிய நீரானது திறந்து விடப்பட்டு தமிழக எல்லை வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இதனை தொடர்ந்து வைகை, பெரியார் மற்றும் மேட்டூர் அணைகளில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக தண்ணீர் திறந்து விட முதல் அமைச்சர் பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டார்.

இதன்படி, தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கும், முதல் போக சாகுபடிக்கும் பெரியார் அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி வீதம் இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உத்தரவிடப்பட்டது.  நீர்திறப்பால் தேனி, உத்தமபாளையம், போடி வட்டங்களில் 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.  வைகை அணையில் இருந்தும், இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அதிகளவில் முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  இதற்காக நேற்று அவர் வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இதனால், தேனி ஆண்டிப்பட்டியில் வைகை அணையில் இருந்து, வேளாண் பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.

இதற்காக நடந்த பூஜையிலும் அவர் கலந்து கொண்டார்.  இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.  இதன்பின்பு அணையில் புரண்டோடிய நீரை துணை முதல் அமைச்சர் பார்வையிட்டார்.

Next Story