‘பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆராய்ச்சி பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்’ மத்திய மந்திரி சதானந்த கவுடா வலியுறுத்தல்


‘பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆராய்ச்சி பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்’ மத்திய மந்திரி சதானந்த கவுடா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Aug 2019 11:00 PM GMT (Updated: 29 Aug 2019 7:13 PM GMT)

‘பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் தயாரிப்புக்கான ஆராய்ச்சிப் பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்’ என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சதானந்த கவுடா கேட்டுக்கொண்டார்.

சென்னை, 

சென்னை, கிண்டியில் உள்ள சிப்பெட் - பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியை, மத்திய ரசாயன, உரத்துறை மந்திரி டி.வி.சதானந்த கவுடா, நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் தினந்தோறும் சுமார் 26 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகிறது. இவற்றில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள், சாலைப் பணிகளிலும், சிமெண்ட் ஆலைகள் மற்றும் திரவ எரிபொருளாகவும் மாற்றி பயன்படுத்தப்படுகின்றன.

ஆண்டுக்கு 36 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 16 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ‘ஒருமுறை மட்டும் உபயோகிக்கக் கூடிய பிளாஸ்டிக்’ பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் சூழலில், பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கையின் பேரில், மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய, உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தூய்மை இயக்கம்

சாலைகளில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க, மாபெரும் தூய்மை இயக்கத்தை சிப்பெட் நிறுவனங்கள் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில், காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதியன்று மேற்கொள்ள வேண்டும். இதில் சிப்பெட் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

சென்னை சிப்பெட் மையத்தில் ரூ.88.25 கோடி மதிப்பிலான தொழில்நுட்ப மையம் அமைக்கவும், ரூ.4.35 கோடி செலவில் அதி நவீன எந்திரங்கள் வாங்குவதற்கான திட்டமும், மத்திய ரசாயன, உரத்துறையின் பரிசீலனையில் உள்ளது.

பிளாஸ்டிக் மறுசுழற்சி

பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் குறைந்த செலவிலான புதிய பொருட்கள் கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் மற்றும் பயோபாலிமர் பொருட்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளில் சிப்பெட் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட வேண்டும்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பு பெறும் வகையில், 5 லட்சம் பேருக்கு வரும் ஐந்தாண்டுகளில் திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story