உலக துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு


உலக துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு
x
தினத்தந்தி 29 Aug 2019 10:30 PM GMT (Updated: 29 Aug 2019 8:20 PM GMT)

உலக துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

பிரேசிலில் நடைபெற்ற உலககோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். சர்வதேச போட்டிகளில் மென்மேலும் பல பதக்கங்களை பெற்று தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடும் போட்டியின் 10 மீட்டர் ‘ஏர்ரைபிள்’ பிரிவில் கடலூர் வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை. அவரது சாதனைகளும், பதக்கங்களும் அதன் வழியான பெருமைகளும் பெருக வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டி.டி.வி.தினகரன், சரத்குமார்

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘20 வயதிலேயே இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கும் இளவேனில், உலக அளவில் இன்னும் பல சாதனைகளை புரிந்திட வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தனது வாழ்த்து செய்தியில், ‘உலககோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நமது மாநிலத்தையும், தேசத்தையும் உலக அரங்கில் பெருமைப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல் புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story