சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு, தமிழக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பரிந்துரை


சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு, தமிழக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பரிந்துரை
x
தினத்தந்தி 29 Aug 2019 10:30 PM GMT (Updated: 2019-08-30T01:20:39+05:30)

தமிழகத்தை சேர்ந்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தை சேர்ந்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து இவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழு பரிந்துரை

சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றியவர் வி.ராமசுப்பிரமணியன். தற்போது இமாசலபிரதேச மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக உள்ளார். இவரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க, மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கி, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் என்றும், அடுத்த சில நாட்களில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக வி.ராமசுப்பிரமணியனை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி பிறந்தவர்.

தலைமை நீதிபதி

அவரது பெற்றோர் சென்னைக்கு குடிபெயர்ந்ததால், திருவல்லிக்கேணியில் உள்ள இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பையும், விவேகானந்தா கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார்.

1983-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி வக்கீலாக பதிவு செய்து, மூத்த வக்கீல்கள் கே.சார்வபவுமன், டி.ஆர்.மணி ஆகியோரிடம் ஜூனியராக பணியாற்றினார். 1987-ம் ஆண்டு முதல் தனியாக வக்கீல் தொழில் செய்து வந்த அவர், கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார்.

பின்னர் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தெலுங் கானா ஐகோர்ட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கடந்த ஜூன் 22-ந்தேதி இமாசல பிரதேச மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

தமிழ் அறிஞர்

இந்த நிலையில், நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இவருடன் சேர்த்து, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திரா பட், கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கிருஷிகேஷ் ராய் ஆகியோரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரைத்துள்ளது.

நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் திறமையான நீதிபதி என்று பெயர் பெற்றவர். வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர். கவுரவக் கொலையை தடுக்க மாவட்ட அளவில் தனிப்படை அமைக்க உத்தரவு பிறப்பித்தவர். இவர் எழுதும் தீர்ப்பின் நடை ஒரு கலை என்று பத்திரிகைகள் புகழாரம் சூட்டியது.

பன்முக திறன்

மிகச்சிறந்த தமிழ் அறிஞரான நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் பெயர் பெற்றவர். ‘அறிவியலுக்கு அப்பால், கம்பனின் சட்டமும் நீதியும், சட்டத்தடைகளும் கம்பனும்’ என்பது உள்பட பல புத்தகங்கள், கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவையெல்லாம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படி பன்முகத்திறன் கொண்ட நீதிபதி வி.ராமசுப்பிரமணியனுக்கு, சரஸ்வதி என்ற மனைவியும், மந்த்ரா என்ற மகளும், தர்ஷன் என்ற மகனும் உள்ளனர்.

Next Story