சென்னையில் பரவலாக இடி, மின்னலுடன் மழை

சென்னையில் பரவலாக நேற்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மதுரை, நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. சென்னையை பொறுத்தமட்டில் நேற்று காலையில் இருந்து பிற்பகல் வரையிலும் கடுமையான வெயில் சுட்டெரித்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமான சூழல் காணப்பட்டது.
சிறிது நேரத்தில் எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, கோயம்பேடு, அமைந்தகரை, அண்ணாநகர், பெரியமேடு, நுங்கம்பாக்கம், பாரிமுனை, சேத்துப்பட்டு, தியாகராயநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
இதனால் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இன்றும் மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், காற்றின் வேகமாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (சனிக்கிழமை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தமட்டில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story