வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை அறிவிப்பு


வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2019 1:24 AM GMT (Updated: 31 Aug 2019 1:24 AM GMT)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

சென்னை, 

மாத சம்பளம் வாங்குபவர்கள், ஓய்வூதியதாரர்கள், மூலதன ஆதாயம், தொழில் வருமானம் பெறுபவர்கள் உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வரி செலுத்துபவர்கள் 2018-19-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இன்றுக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

அதே சமயத்தில் 2018-19-ம் நிதி ஆண்டுக்கான வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருப்பவர்கள் நாளை (செப்டம்பர் 1-ந் தேதி) முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ரூ.1,000 வசூலிக்கப்படும். இதேபோல ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்தை தாண்டியவர்கள் செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து டிசம்பர் 31-ந் தேதி இடையேயான காலக்கட்டத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ரூ.5 ஆயிரமும், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து மார்ச் 31-ந் தேதி இடையேயான காலக்கட்டத்தில் தாக்கல் செய்தால் ரூ.10 ஆயிரமும் வசூலிக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு பின்னர் 2018-19-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யமுடியாது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் வசதிக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி அலுவலக எல்லைக்கு உட்பட்ட வருமான வரி சேவை மையங்கள் இன்று திறந்திருக்கும். வருமான வரி செலுத்துபவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவல் சென்னை வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஆர்.இளவரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story