முஸ்லிம் மதத்துக்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்காதது சரிதான் ஐகோர்ட்டு உத்தரவு
உட்பிரிவை குறிப்பிடாமல் முஸ்லிம் மதத்துக்கு மாறியவருக்கு, பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்காதது சரிதான் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் ரில்வான். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர், 24 மனை தெலுங்கு செட்டி பிரிவை சேர்ந்தவர். இவரது மனைவி ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவர். கடந்த 2012-ம் ஆண்டு ரில்வான் தனது குடும்பத்தினருடன் முஸ்லிம் மதத்துக்கு மதம் மாறினர்.
இதையடுத்து தனக்கும், தன் மனைவி, குழந்தைகளுக்கும் இஸ்லாம் மதத்தில் ‘லெப்பை’ பிரிவு என்று குறிப்பிட்டு பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் கேட்டு திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் ரில்வான் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பத்தை தாசில்தாரும், பின்னர் செங்கப்பட்டு வருவாய் மண்டல அதிகாரியும் நிராகரித்து விட்டனர். இதை எதிர்த்து அவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
சாதி சான்றிதழ்
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் வி.சண்முகசுந்தர், முஸ்லிம் மதத்தில் லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. மதம் மாறும்போது உட்பிரிவை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட ஜமாத்தில் மதமாற்றம் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால், மனுதாரர் அரசிதழில் தனது மதமாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்ததில் லெப்பை என்ற உட்பிரிவை குறிப்பிடவில்லை. அதனால் அவர் முற்படுத்தப்பட்டோர் பிரிவாகவே கருதப்படுவார். பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்க முடியாது என்று வாதிட்டார்.
சரிதான்
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறும்போது சம்பந்தப்பட்ட நபர் இஸ்லாம் மதத்தில் தான் சேரும் உட்பிரிவை குறிப்பிட வேண்டும். மனுதாரர் அதை செய்யவில்லை. அதனால், அதிகாரிகளின் நடவடிக்கை சரியானது தான். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story