போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் இலங்கை தூதரகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை தூதரகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சோதனை நடத்திய அதிகாரிகள் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த முகமது ஷியாம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாபுலால் சவுகான் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏசுதாஸ் ஆகியோரை கடந்த 2001-ம் ஆண்டு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ஹெராயினை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. கைதான 3 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கை விசாரித்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நீதிபதி, முகமது ஷியாம், பாபுலால் சவுகான் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் இருவரும் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். அப்போது, முகமது ஷியாம், பாபுலால் சவுகான் சார்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர்கள் சார்பில் ஆஜராக சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலம் வக்கீல் வீரமார்த்தனி நியமிக்கப்பட்டார்.
ஒப்படைக்க உத்தரவு
இந்த வழக்கு விசாரணையின்போது இருவரும் தலை மறைவாகி விட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ‘சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்கிறேன்.
தலைமறைவான பாபுலால் சவுகானை கைது செய்ய மத்திய பிரதேச மாநில டி.ஜி.பி.க்கும், முகமது ஷியாமை கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க இலங்கை தூதரகத்துக்கும் உத்தரவிடுகிறேன்’ என்று தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story