தமிழகம் முழுவதும் வாக்காளர் விவரங்களை சரிபார்க்க புதிய வசதிகள் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு


தமிழகம் முழுவதும் வாக்காளர் விவரங்களை சரிபார்க்க புதிய வசதிகள் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Sept 2019 4:30 AM IST (Updated: 1 Sept 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களை சரிபார்த்து கொள்வதற்கு புதிய வசதிகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

சென்னை, 

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இ.வி.பி என்ற வாக்காளர் சரிபார்க்கும் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று முதல் நடைமுறைபடுத்த உள்ளது. 1.1.2020-ஐ வாக்காளராக தகுதி பெரும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்கத்திருத்த பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் வாக்காளர் பட்டியல் எவ்வித தவறும் இல்லாமல் செம்மைப்படுத்தப்படும்.

இ.வி.பி. திட்டம் இன்று முதல் 30-ந்தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் படி வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களை கீழ்க்கண்ட தகவல்கள் மூலம் சரிபார்த்து கொள்ளலாம். 1950 என்ற வாக்காளர் ஹெல்ப் லைன், அதற்கான செல்போன் செயலி, எ.வி.எஸ்.பி என்ற இணையதளம், பொதுசேவை மையங்கள், வாக்காளர்கள் சேவை மையங்கள் ஆகியவற்றின் மூலமாக சரிபார்த்து கொள்ளலாம். அதோடு விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்களிடம் கொடுத்தும் பெயர் விவரங்களை சரிபார்க்கலாம்.

சான்றிதழ்கள்

இந்த சரிபார்ப்பு பணிக்காக இந்திய பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, நகராட்சி அதிகாரி அல்லது மாவட்ட பதிவு அதிகாரி வழங்கிய பிறப்பு சான்றிதழ், ஞானஸ்தான சான்றிதழ், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் வழங்கிய பிறப்பு சான்றிதழ், பிறந்த நாள் குறிப்பிடப்பட்ட 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பிறந்தநாள் குறிப்பிடப்பட்ட 5 அல்லது 8-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வங்கி, கிஷான், தபால் அலுவலக பாஸ் புக், வருமானவரி கணக்குகள், சமீபத்தில் செலுத்தப்பட்ட தண்ணீர், தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பு ஆகியவற்றிற்காக செலுத்திய கட்டண ரசீது மற்றும் தபால் அலுவலகம் மூலம் பெறப்பட்ட வீட்டு முகவரிக்கு வந்த கடிதங்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை வாக்காளர் பட்டியல் விவரங்களை சரி பார்ப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொது சேவை மையங்கள்

தமிழகத்தில் இதற்காக உள்ள 8 ஆயிரத்து 95 பொது சேவை மையங்கள், 661 தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மையங்கள், 1,001 அரசு கேபிள் டி.வி.யுடன் இணைந்த மையங்கள், 97 வாக்காளர் சேவை மையங்கள், ஆகியவை அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மையங்கள் அனைத்தும் கிராமங்கள், தாலுகாக்கள், வாக்காளர்பதிவு அதிகாரிகள் அலுவலகங்கள், மாவட்டங்கள் அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே இந்த வசதிகளை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story