‘வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன்’ என கூறி காதலன் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தர்ணா


‘வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன்’ என கூறி காதலன் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தர்ணா
x
தினத்தந்தி 1 Sept 2019 3:15 AM IST (Updated: 1 Sept 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

‘வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன்“ என கூறி சேலத்தில் காதலன் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

சேலம் கொண்டலாம்பட்டி எஸ்.நாட்டாமங்கலம் மாதேஸ்வரன் மலை பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மகள் கவுசல்யா(வயது 23). பி.ஏ. ஆங்கிலம் முடித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளியான பூபதி(27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென கவுசல்யாவை திருமணம் செய்ய பூபதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கவுசல்யா வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பூபதியை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கவுசல்யாவை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்.

தர்ணா போராட்டம்

இந்தநிலையில் பூபதி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காதலனை சந்திக்க முடியாமல் கவுசல்யா தவித்தார். பின்னர் விவரம் அறிந்த கவுசல்யா நேற்று காலை தனது காதலன் வீட்டுக்கு வந்தனர். இதையடுத்து அவர் தனது காதலனை அவருடைய உறவினர்கள் கடத்தி சென்றுவிட்டதாக கூறி திடீரென வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் தந்தை சின்னதுரையும் உடன் இருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவுசல்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர், தனது காதலன் வரும்வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறினார். தொடர்ந்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவருடன் தான் வாழ்வேன்

இதுகுறித்து கவுசல்யா கூறும்போது, ‘பூபதி என்னை காதலிப்பது உண்மை, அவர் என்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். ஆனால் இதற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் அவரை மிரட்டி கடத்தி சென்று வைத்துள்ளனர். வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன். என்னை அவருடன் சேர்த்து வையுங்கள்“ என்றார். மேலும் அவர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

Next Story