‘கவர்னர் பதவி எதிர்பாராமல் கிடைத்தது’ தமிழிசை சவுந்தரராஜன் நெகிழ்ச்சி
கவர்னர் பதவி எதிர்பாராமல் கிடைத்தது என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியானவுடன் தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் தமிழிசை சவுந்தரராஜனை வாழ்த்தி கோஷமிட்டனர். தொண்டர்களின் வருகையை அறிந்ததும், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கமலாலயம் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக நியமிக்கப்பட்டதால் அவரது மாநில தலைவர் பதவி, அடிப்படை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தார். அதனை குறிப்பிடும் வகையில் தொண்டர்களிடம் நெகிழ்ச்சியுடன் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ‘நான் இப்போது கட்சியின் உறுப்பினராக இல்லாமல் கமலாலயம் வந்துள்ளேன். உங்கள் அன்புக்கு நன்றி’ என்று தெரிவித்தார். பின்னர் அவர் முறைப்படி மாநிலதலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அங்கீகாரம்
ஆண்டவனுக்கும், ஆளுகின்றவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இது சிபாரிசால் கிடைத்தது இல்லை, உழைப்புக்கு கிடைத்தது. பிரதமர் நரேந்திரமோடியும், அமித்ஷாவும் என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு இந்த பொறுப்பை அளித்து இருக்கிறார்கள். என் மீது பாசம் கொண்டிருக்கிற பா.ஜ.க. தொண்டர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கும், தமிழக மக்களுக்கும், எனது பெற்றோருக்கும் எனது நன்றி.
இந்த வயதில் இத்தகைய உயர்வு நான் எதிர்பார்க்காத ஒன்று. பிரதமர் மோடியும், எங்கள் தேசிய தலைவர் அமித்ஷாவும் உழைப்புக்கு மரியாதை கொடுப்பார்கள். பா.ஜ.க.வில் இணைந்ததில் இருந்து உழைப்பை தவிர நான் வேறு எதையும் கட்சிக்கு தந்ததில்லை. எனது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை கருதுகிறேன். அடிப்படை உறுப்பினரில் இருந்து மாநில தலைவராக உயர்ந்து, இன்றைக்கு ஒரு கவர்னராக என்னை அமர்த்தி இருக்கிறார்கள் என்றால், உண்மையிலேயே நான் செய்த பாக்கியம். தமிழக மக்களுக்கு நான் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாசத்தை விட்டுக் கொடுத்தேன்
தமிழக மக்களுக்கும் என் வாழ்நாள் சேவை இருக்கும். அதேபோன்று நான் செல்லும் மாநிலத்திற்கும் எனது சேவை இருக்கும். தமிழில் இருந்து சுந்தர தெலுங்கானாவிற்கு செல்வதில் மகிழ்ச்சி. எப்படி இருந்தாலும் நான் உங்கள் தமிழிசை தான். ஒரேநாடு என்ற முறையில் அங்கே செல்கிறேன். நான் எப்போதும் எல்லோரிடமும் எளிமையாக பழகுவேன். எந்த உயர்ந்த பதவிக்கு சென்றாலும் இதை நான் கடைபிடிப்பேன். தெலுங்கானாவிற்குதான் நான் கவர்னர், தமிழகத்திற்கு எப்போதும் உங்கள் சகோதரிதான்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
கேள்வி:-உங்கள் அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலாக எதை பார்க்கிறீர்கள்?
பதில்: காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும், ஒரு காங்கிரஸ் கட்சியின் தலைவரின் மகளாக இருந்தாலும் மருத்துவ படிப்பை முடித்தவுடன் பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்தேன். அதில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல், கட்சியில் தடம் பதிக்க உறுதியாக இருந்தது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. என் பாதைக்காக எனது பாசத்தை விட்டுக்கொடுத்ததும், அன்பான பா.ஜ.க. தொண்டர்களுக்காக அப்பாவை (குமரி அனந்தன்) விட்டுக்கொடுக்க முன்வந்தது என்பதும் வாழ்க்கையில் ரணமான விஷயம். ஆனாலும் இந்த பாதையை நான் தேர்ந்தெடுத்ததற்கு அவர் மகிழ்வார். இந்த அறிவிப்பு வந்தவுடன் நான் முதலில் வர விரும்பியதும், வந்ததும் இந்த கமலாலயம் தான். ஏனென்றால் இது தாமரையின் கோவில்.
விமர்சனம்
கேள்வி:-கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள். கட்சி பணியை நீங்கள் தொடர முடியாது. இத்தகைய சூழ்நிலை உங்களுக்கு எப்படி இருக்கிறது?
பதில்:-எப்போது அறிவிப்பு வந்ததோ, அந்த நிமிடத்தில் இருந்து நான் பா.ஜ.க. உறுப்பினர் அல்ல. எனது தலைமையில் 44½ லட்சம் உறுப்பினர்களை சேர்த்து விட்டு தான் நான் உறுப்பினர் இல்லாமல் ஆகியிருக்கிறேன். இதுவும் மகிழ்ச்சி கலந்தது தான். அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். நான் இப்போது கட்சி உறுப்பினர் கிடையாது.
கேள்வி:-தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு விமர்சனம் அளிக்கும் தமிழிசை இனி விமர்சிக்க முடியாத தமிழிசையாக இருக்க வேண்டுமே? இதை எப்படி நினைக்கிறீர்கள்?.
பதில்:-இனி விமரிசையாக இருப்போம் (சிரிக்கிறார்).
கேள்வி:-எப்போது தெலுங் கானாவிற்கு செல்ல இருக்கிறீர்கள்?
பதில்:-எனக்கென்று சில கடமை இருக்கிறது. அதை செய்து விட்டு அங்கே செல்வேன்.
கேள்வி:-கவர்னராக உங்கள் நடவடிக்கை எப்படி இருக்கும்?
பதில்:-முன்மாதிரியாக இருப்பேனே தவிர, இவர்களை மாதிரி என்று சொல்லும் நிலையில் இருக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story