என்ஜினீயரிங் படிப்பில் காலியாக உள்ள 300 இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த முன்வர வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
என்ஜினீயரிங் படிப்பில் காலியாக உள்ள 300 இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த முன்வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
300-க்கும் மேற்பட்ட காலி இடங்கள்
இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் 300-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக இருப்பதாக பல் கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மதிப்புமிக்க மாணவர் சேர்க்கை இடங்கள் யாருக்கும் பயனில்லாத வகையில் காலியாக கிடப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை மட்டுமே இப்போது வெளியாகியிருக்கிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள முன்னணி தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் விலகியதால் ஏற்பட்ட காலி இடங்களின் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. அவற்றையும் சேர்த்தால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 1000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
சிறப்பு கலந்தாய்வு
ஆனால், மாணவர்கள் நலனுக்கு எதிரான நடைமுறையை காரணம் காட்டி சிறப்பு கலந்தாய்வு நடத்த மறுப்பதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் 300 மாணவர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்ட உயர்தரமான என்ஜினீயரிங் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத சமூக அநீதி ஆகும்.
அடுத்தடுத்து கலந்தாய்வுகளை நடத்துவது சிக்கலான ஒன்றுதான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் தகவல் தொழில்நுட்பம் பெருகிவிட்ட இன்றைய சூழலில் இதை மிகவும் எளிதாக சமாளித்துவிட முடியும். ஒவ்வொரு ஆண்டும் முன்னணி கல்வி நிறுவனங்களில் 1000-க்கும் மேற்பட்ட காலி இடங்கள் யாருக்கும் பயனின்றி போவதையும் அந்த இடங்களுக்கும் சேர்த்து கோடிக் கணக்கான ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாவதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சில சிக்கல்கள் இருந்தாலும் சிறப்பு கலந்தாய்வு நடத்தி காலியாக உள்ள இடங்களை நிரப்புவதுதான் சரியானதாகவும், சமூக நீதியாகவும் இருக்கும்.
எனவே, அண்ணா பல்கலைக்கழகங்களில் உள்ள 300 காலி இடங்கள், முன்னணி தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள காலி இடங்கள் ஆகியவற்றை நிரப்ப தமிழக அரசும், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகமும் இணைந்து சிறப்பு கலந்தாய்வு நடத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story