தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிப்பு


தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 Sept 2019 3:15 AM IST (Updated: 3 Sept 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்தத்தின்படி தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.

சென்னை,

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்டவை. மீதமுள்ள சுங்கச்சாவடிகள் 2008-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டவை. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி வருடத்துக்கு ஒருமுறை சுங்கச்சாவடியில் பயனாளர் கட்டணத்தை அதிகபட்சமாக 10 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 1992-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அடங்கின.

இந்தநிலையில் செப்டம்பர் மாதம் பிறந்ததை தொடர்ந்து 2008-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008-ன்படி, தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் நேற்று கட்டணம் உயர்ந்துள்ளது.

15 சுங்கச்சாவடிகள் விவரம் வருமாறு:-

பாளையம் (கிருஷ்ணகிரி- தோப்பூர் சாலை), நல்லூர் (சென்னை-தடா), வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்), எலியார்பத்தி (மதுரை-தூத்துக்குடி), கொடைரோடு (திண்டுக்கல்-சமயநல்லூர்), மேட்டுப்பட்டி (சேலம்-உளுந்தூர்பேட்டை), மண்வாசி (திருச்சி-கரூர்), விக்கிரவாண்டி (திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை), பொன்னம்பலப்பட்டி (திருச்சி-திண்டுக்கல்), நத்தக்கரை (சேலம்- உளுந்தூர்பேட்டை), புதூர் பாண்டியபுரம் (தூத்துக்குடி- மதுரை), திருமந்ததுரை (உளுந்தூர்பேட்டை-பாடலூர்), வாழவந்தான் கோட்டை (திருச்சி-தஞ்சை), வீரசோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை), விஜயமங்கலம் (குமாரபாளையம்-செங்கம்பள்ளி).

இதன்படி 52 கி.மீ. தூரத்துக்குள் பயணிக்கும் கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை சென்றுவரை ரூ.60 கட்டணமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இலகுரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்து ஆகியவற்றுக்கு ரூ.95 கட்டணமாகவும், லாரி-பஸ்கள் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.195 கட்டணமாகவும், கட்டுமானத்துக்கு பயன்படும் மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு ரூ.305 கட்டணமாகவும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடி கட்டண விவரம் வருமாறு:- (அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம்)

கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்கள்- ரூ.50 (ரூ.49), மினி பஸ்கள், இலகுரக வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்கள் - ரூ.90 (ரூ.84), 2 அச்சு கொண்ட லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் - ரூ.175 (ரூ.168), 3 அச்சுகள் முதல் வர்த்தகம் சார்ந்த மிகப்பெரிய கனரக வாகனங்கள் - ரூ.285 (ரூ.269).

Next Story