தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பலில் தீப்பிடித்ததால் பரபரப்பு


தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பலில் தீப்பிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Sept 2019 3:15 AM IST (Updated: 4 Sept 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துறைமுகத்தில் நின்ற சரக்கு கப்பலில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து நிலக்கரி, புண்ணாக்கு உள்ளிட்ட மொத்த சரக்குகள் கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி இந்தோனேசியாவில் இருந்து டி.எஸ்.பேவர் என்ற கப்பல், புண்ணாக்கு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடிக்கு வந்தது.

இந்த கப்பல் நேற்று அதிகாலை 5.18 மணி அளவில் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கு 5-வது சரக்கு தளத்தில் கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில் கப்பலில் ஆயில் டேங்கர் பகுதியில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. தொடர்ந்து பூச்சி தடுப்பு மருந்து வைக்கப்பட்டு இருந்த பகுதியிலும் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கரும் புகை வரத்தொடங்கியது. இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது.

உடனடியாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இழுவைக்கப்பலில் இருந்து தீயை அணைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். மேலும் துறைமுக தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்களின் துரித செயலால் கப்பலில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story