அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் தலைமையில் நடந்தது


அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 4 Sept 2019 4:45 AM IST (Updated: 4 Sept 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து சென்னையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேதாரண்யத்தில் சாதி, மத வெறி அமைப்புடன் தொடர்புடையவர்கள் அம்பேத்கர் சிலையை உடைத்துள்ளனர். சிலைகளை அவமதிக்கும் நிலை தமிழகத்தில் தான் நீடிக்கிறது. இதற்கு அதிகாரிகளின் மெத்தனமும், அரசின் அலட்சியமும் தான் காரணம். இந்த சிலையை தகர்க்கும் செயல்களுக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைக்கும் வரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மெத்தன போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். வேதாரண்யத்தில் உடனடியாக சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும் என்பதற்காக அம்பேத்கரின் சிமெண்டு சிலையை போலீசார் வைத்துள்ளனர். ஆனால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது. வேதாரண்யத்தில் அம்பேத்கரின் வெண்கல சிலையை அரசு நிறுவ வேண்டும்.

தமிழகத்தில் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகள் அதிகமாக அவமதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தலைதூக்கி வருகிற மதவாத சக்தி தான் காரணம். சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும். இல்லை என்றால் இது மக்கள் போராட்டமாக வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story