தமிழக பா.ஜனதா புதிய தலைவர் யார்?
தமிழக பா.ஜனதாவின் புதிய தலைவரை தேர்வு செய்வதில் பலத்த போட்டி நிலவுகிறது.
சென்னை,
தமிழக பா.ஜனதா தலைவராக பதவி வகித்து வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2014 ஆகஸ்டு 16-ந்தேதி முதல் கடந்த 1-ந்தேதி வரை தமிழக பா.ஜனதா தலைவராக தொடர்ச்சியாக 2 முறை பதவி வகித்து உள்ளார். தற்போது அவர் கவர்னராக நியமிக்கப்பட்டது முதல் தமிழக பா.ஜனதா தலைவர் பதவி காலியாக இருந்து வருகிறது.
தமிழக பா.ஜனதாவின் முதல் தலைவராக கே.நாராயணன் நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, விஜய ராகவலு, டாக்டர் சந்திரபோஸ், கே.என்.லெட்சுமணன், டாக்டர் எஸ்.பி.கிருபாநிதி, சி.பி.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் என இதுவரை 9 பேர் தமிழக பா.ஜனதா தலைவர்களாக இருந்து உள்ளனர். இவர்களில், பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தொடர்ச்சியாக 2 முறை தலைவர் பதவியை வகித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழக பா.ஜனதாவின் 10-வது தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான அமைப்பு தேர்தலை நடத்துவதற்கு பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டு வந்தது. இதற்காக, பா.ஜனதா கட்சியின் தேசிய தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் சிங் தமிழக பா.ஜனதா அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக கே.திருமலைசாமியையும், தேர்தல் இணை பொறுப்பாளராக எம்.எஸ்.ராமலிங்கத்தையும் நியமித்து உள்ளார்.
இந்த தேர்தல் பொறுப்பாளர்கள் இந்த மாதம் இறுதியில் இருந்து தமிழக பா.ஜனதா கிளை நிர்வாகிகளை தேர்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு வட்டம், மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிற டிசம்பர் மாதம் இறுதியில் மாநில தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
அதுவரை, கட்சி சார்ந்த நடவடிக்கைகளை தமிழக பா.ஜனதா அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் கவனித்துக் கொள்வார் என்றும், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை பொதுச்செயலாளர்கள் மற்றும் துணை தலைவர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்றும் பா.ஜனதா வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
தற்போது மத்தியில் பா.ஜனதா கட்சி முழுபலத்துடன் ஆட்சி நடத்தி வரும் நிலையில், தமிழக பா.ஜனதாவின் தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில், அ.தி.மு.க.வில் இருந்து பா.ஜனதாவில் இணைந்த நயினார் நாகேந்திரன், பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில செயலாளர் கே.டி.ராகவன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பொதுச்செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
யாராக இருந்தாலும், தமிழக பா.ஜனதா தலைவர் யார்? என்பதை கட்சி தலைமை அறிவிப்பதற்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கின்றன. அதுவரை பல்வேறு வியூகங்களும், யூகங்களும் திடீர், திடீரென கிளம்பிக் கொண்டே தான் இருக்கும்.
Related Tags :
Next Story