சவால்களை எதிர்கொள்வது எனது குணம் தெலுங்கானா கவர்னராக சட்டப்படி பணியாற்றுவேன் - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்


சவால்களை எதிர்கொள்வது எனது குணம் தெலுங்கானா கவர்னராக சட்டப்படி பணியாற்றுவேன் - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 7 Sept 2019 5:15 AM IST (Updated: 7 Sept 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். விரைவில் பொறுப்பேற்க இருக்கும் அவர், அந்த மாநில வளர்ச்சிக்காக திறம்பட சட்டப்படி பணியாற்றுவேன் என தெரிவித்தார்.

இது தொடர்பாக தினத்தந்திக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகையில், ‘கடின உழைப்பு, நேர்மை மற்றும் உண்மைக்கு பரிசாக கவர்னர் பதவியை வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி. இது போன்ற நிகழ்வுகள் பா.ஜனதாவில் மட்டுமே நடக்கும்’ என்று மகிழ்ச்சியை வெளியிட்டார்.

ஒரு கவர்னராக, ஏழ்மையில் உள்ளவர்களின் மேம்பாட்டிற்காகவும், பெண் குழந்தைகள் கல்வி, அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார விஷயத்தில் தனி அக்கறை எடுத்துக்கொள்வேன் என்று கூறிய டாக்டர் தமிழிசை, பொதுமக்களை தினமும் சந்தித்து கருத்துகளை கேட்டு, அதனை செயல்படுத்த இருப்பதாகவும் கூறினார்.

பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-புதிய கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். தெலுங்கானாவில் உங்களுடைய உடனடி சவால்களாக எதை கருதுகிறீர்கள்?

பதில்:- தெலுங்கானா புதிதாக பிரிக்கப்பட்ட மாநிலம். அது புதிய குழந்தை போன்றது. நான் ஏற்கனவே மகப்பேறு மருத்துவராக இருந்து பல குழந்தைகளை கையாண்டு இருக்கிறேன். அதுபோல, அந்த மாநிலத்தையும் நேர்மறையான விதத்தில், மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் அளவுக்கு நடத்தி செல்வேன். அதாவது ஒரு பாசமிகு சகோதரியாக செயல்படும்போது அந்த மாநிலத்தில் நம்மால் அதிகம் சாதிக்க முடியும்.

சலசலப்பு எதுவும் இல்லாமல் மகிழ்ச்சியான தருணத்தில் நம்மால் எல்லாமே செய்ய முடியும். ஒரு சகோதர உணர்வுடன், அரசுடன் நல்ல உறவை மேற்கொண்டு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முயல்வேன். தெலுங்கானா பிறந்தநாளும் (ஜூன் 2) என்னுடைய பிறந்தநாளும் ஒரே நாளில் அமைந்து இருக்கிறது. மக்கள் என்னுடைய முகநூலில் இதை பார்த்து விட்டு குறிப்பிட்டார்கள். அதுவும் தெலுங்கானா பிறந்த ஆண்டான 2014-ல் தான் நான் தமிழக பா.ஜ.க. தலைவராக பதவியேற்றேன். நான் எதையும் நோக்கி செல்வதில்லை, என்னை நோக்கி அதுவாக வருகிறது. என்னை பொறுத்தவரை எனக்கு கொடுத்த வேலையை நான் அப்படியே செய்வேன். தெலுங்கானா கவர்னராக திறம்பட பணியாற்றுவேன்.

சிறிய வயதில் இருந்தே எனக்கு கொடுக்கிற வேலையை சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். கவலைகளுக்கு அசைந்து கொடுக்காமல் இருப்பதும், சவால்களை எதிர்கொள்வதும் என் குணம். சமுதாயத்திற்கு நான் பயன்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எனக்கு எப்போதும் இருக்கும்.

கேள்வி:-நீங்கள் தெலுங்கானாவின் முதல் பெண் கவர்னராக, அதுவும் ஒரு தமிழ் பெண்ணாக நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:-எனக்கு தெலுங்கானாவில் இருந்து சிலர் வாட்ஸ் அப்பில் சில தகவல்களை அனுப்பி இருக்கிறார்கள். அங்கு பெண் அமைச்சர்களே கிடையாது. அப்படிப்பட்ட மாநிலத்தில் நான் செல்ல இருக்கிறேன். இதை அங்குள்ளவர்கள் அக்காரு (அக்கா) என்று எழுதுகிறார்கள். இங்கேயும் என்னை அக்கா என்று தான் அழைக்கிறார்கள். அங்கே போவதற்கு முன்பே அக்கா ஆகிவிட்டேன். அது பெரிய மகிழ்ச்சி. ஏனென்றால், நான் ஒரு டாக்டர், அரசியல்வாதி அதை விட எல்லோருமே என்னை சகோதரியாக தான் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். நம்ம வீட்டு பெண்ணாக பார்க்கிறார்கள். இது எனக்கு மிகப்பெரிய பாக்கியம்.

1999 செப்டம்பர் 17-ல் பா.ஜ.க. உறுப்பினராக இணைந்தேன். அப்போதைய கட்சி தலைவராக இருந்த கே.என்.லட்சுமணன் கையெழுத்திட்ட முதல் உறுப்பினர் அட்டையை பெற்றேன். செப்டம்பர் 17-ந்தேதி மோடி பிறந்தநாள் என்பது அவர் பிரதமர் ஆன பிறகு தான் தெரியும். இந்த 20 ஆண்டுகளில் கட்சியின் எல்லா நிலையையும் கடந்து இருக்கிறேன். சாதாரண உறுப்பினராக இருந்தேன், என்னுடைய உழைப்பு, உண்மை தன்மையால் உயர்ந்து வந்தேன். இது தான் என்னுடைய பயணமாக இருந்தது.

கேள்வி:-பா.ஜ.க. உறுப்பினராக முதலில் இணைந்த தருணத்தையும், தற்போது பா.ஜ.க. அடிப்படை உறுப்பினர் இல்லாத நிலையையும் எப்படி உணருகிறீர்கள்?

பதில்:-பா.ஜ.க. உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது மிக கடினமான காரியம். ஆனாலும் 44 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து விட்டுதான், அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன். என் பணியை முழுமையாக முடித்து விட்டு தான் வந்திருக்கிறேன். பா.ஜ.க.வில் அதிக நாட்கள் மாநிலத்தலைவர் பதவி வகித்தது நான் தான். டிசம்பருக்கு பிறகு நான் தலைவராக இருக்க முடியாது. இது கட்சியின் விதி முறை. கட்சி எனக்கு அடையாளம் கொடுக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த அளவுக்கு அடையாளம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

கேள்வி:-ஆந்திர பிரதேசம்-தெலுங்கானா என இரண்டு மாநிலமாக பிரிக்கப்பட்டும், 9, 10-வது அட்டவணையில் பூர்த்தியாகவில்லை. இதை நீங்கள் எப்படி கையாள போகிறீர்கள்?

பதில்:-நான் ஒரு டாக்டர். பொதுவாக டாக்டர்களுக்கு என்ன பழக்கம் இருக்கும், முதலில் அடையாளம் காண்பது, அதன் பிறகு எந்த நோய் இருக்கிறது? அதற்கு என்ன சிகிச்சை வேண்டும் என்பதெல்லாம் முழுமையாக ஆராய்வேன். அதைபோன்று என் நடவடிக்கை அமையும். பொதுவாக எதிர்மறையாக நான் செயல்பட மாட்டேன். என் கருத்தில் இருந்து மற்றவர்களுக்கு எதிர் கருத்து இருந்தால் கூட பேசி தீர்ப்பதும், அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் என் பழக்கம் தான்.

இப்போதே கவர்னர் அதிகாரம் குறித்த புத்தகத்தை வாங்கி வைத்து விட்டேன். எந்த வேலையை செய்தாலும் அது குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு போக வேண்டும் என்று விரும்புகிறேன். மனதில் தமிழையும், தெலுங்கையும் வைத்துக்கொண்டு செயல்படுவேன். தமிழுக்கும், தெலுங்குக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் இணைப்பு பாலமாக செயல்படுவேன்.

கேள்வி:-தெலுங்கானா மாநில வளர்ச்சிக்காக அந்த அரசுடன் இணைந்து பணியாற்றுவீர்களா?

பதில்:-நான் ஏற்கனவே கூறி விட்டேன். மாநில அரசுடன் சுமுகமான உறவுடனும், ஆர்வத்துடனும் பணியாற்ற ஆசைப்படுகிறேன். அரசுடன் இணைந்து நல்ல உறவை மேற்கொண்டு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முயல்வேன்.

கேள்வி:-நீங்கள் தெலுங்கானா கவர்னராக மட்டுமின்றி, பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் உள்ளர்கள்? இதில் உங்களுடைய பங்கு என்னவாக இருக்கும்? புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவீர்களா?

பதில்:-கொள்கை முடிவு குறித்து நான் பேச முடியாது. அதேநேரத்தில் நான் மருத்துவக்கல்லூரி பேராசிரியராக இருந்து இருக்கிறேன். அந்த பணியில் போதுமான அளவு அனுபவம் இருக்கிறது. பெண் குழந்தைகள் படிப்பு, அவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறை எடுத்துக்கொள்வேன். அதேநேரத்தில், மருத்துவம் விஷயத்திலும் நான் தனி அக்கறை எடுத்துக்கொள்வேன். அங்கு டெங்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாக கேள்விப்பட்டேன். எனவே மருத்துவ சேவையை முடுக்கி விடுவேன். தமிழக அரசு டெங்கு விஷயத்தில் சரியான நடவடிக்கை மேற்கொண்டது. அதேபோன்று தெலுங்கானாவும் செயல்பட வலியுறுத்துவேன்.

கேள்வி:-தெலுங்கானாவில் 9 பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லையே?

பதில்:-வெளிப்படை தன்மையுடன் நான் செயல்படுவேன். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் பிடித்த விஷயம் என்னவென்றால், யாருடைய சிபாரிசும் இல்லாமல் தகுதியின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமித்தார். அதேபோன்று என் நடவடிக்கையும் அமையும். வெளிப்படை தன்மையுடன் தான் என்னால் இருக்க முடியும். நான் பிரதமரை பின்பற்றுகிறேன். அவர் செய்வது தவறாக இருக்காது. எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து முன் உதாரணமாக செயல்படுவேன்.

கேள்வி:-2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நிறைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்து இருக்கிறார்கள்? இதை நீங்கள் எப்படி சமாளிக்க போகிறீர்கள்?

பதில்:-நான் அரசியல் பற்றி பேச மாட்டேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். அரசியலமைப்பு பொறுப்புகளை மட்டும் நான் பார்ப்பேன்.

கேள்வி:-கர்நாடக கவர்னர் மக்களை, கவர்னர் மாளிகையை சுற்றி பார்க்க அனுமதி வழங்கியிருக்கிறார்? அதுபோன்று நீங்கள் ஏதாவது திட்டம் வைத்து இருக்கிறீர்களா?

பதில்:-என்னிடமும் திட்டங்கள் இருக்கிறது. நான் ஏற்கனவே மாநில தலைவராக இருந்தபோது, மக்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறேன். நான் மிகவும் எளிமையாக இருப்பேன். என்னை எளிதில் அணுகும் வகையில் நடந்து கொள்வேன்.

கேள்வி:-நீங்கள் அரசியலில் இருந்து வெளியேறி விட்டீர்கள். அதே நேரத்தில் உங்கள் குடும்பத்தில் இருந்து யாராவது அரசியலுக்குள் வருவார்களா?

பதில்:-அரசியலில் இருந்து நான் விலக்கப்படவில்லை. பொது வாழ்க்கையில் தான் இருக்கிறேன். என் குழந்தைகள் அரசியலுக்கு வந்தால் எதிர்க்க மாட்டேன். அவர்களுக்கு விருப்பம் இருந்தால் வரலாம். என் பிள்ளைகள் 2 பேருக்குமே அரசியல் ஆர்வம் இருக்கிறது. சமூக உணர்வு அதிகமாக அவர்களுக்கு இருக்கிறது. என்னிடமே அரசியல் குறித்து அவர்கள் பேசுவார்கள். அதேநேரத்தில் அவர்களை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். அவர்கள் அரசியலுக்கு வருவதை நான் மறுக்க மாட்டேன். என் தந்தை (குமரி அனந்தன்) காங்கிரஸ் தலைவர். நான் பா.ஜ.க.வில் இணைந்தபோதும், என் தந்தை உன் கட்சிக்கு உன்னால் என்ன செய்ய முடிமோ அதை செய் என்றார்.

கேள்வி:-புதிய பா.ஜ.க. தலைவருக்கு நீங்கள் என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?

பதில்:-நான் அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. எனக்கு பின்னால் தலைவராக வருபவர்களுக்கு நான் அறிவுரை வழங்க முடியாது. யார் ஒருவர் தொண்டர்களை மதிக்கிறார்களோ, அவர்கள் தான் அடுத்த தலைவராக வர முடியும்.

கேள்வி:-தமிழுக்கும், தமிழர்களுக்கும் பா.ஜ.க. அரசு எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்:-அப்படி குற்றச்சாட்டு எதுவும் இல்லை. எனக்கு கொடுத்த வேலையை நான் சரியாக செய்துள்ளேன். யார் கடுமையாக உழைக்கிறார்களோ அவர்களுக்கு பா.ஜ.க. நல்ல அங்கீகாரம் கொடுக்கும். என்னை பொறுத்தவரை பிரதமர் மோடி ஒரு கடவுள். பிரதமர் நரேந்திரமோடி தமிழர்களுக்கு மரியாதை கொடுக்கிறார். தமிழ் மக்களுக்காக பல நல்ல திட்டங்களை முன்னெடுத்துள்ளார். மத்திய அரசின் பல திட்டங்களுக்கு மாநில அரசு துணையாக இருந்து இருக்கிறது.

இது எனக்கு கிடைத்த பதவியாக நினைக்கவில்லை. தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள மரியாதைக்காகவும் இந்த பதவி கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். தமிழுக்கு உரிய மரியாதையை மத்திய அரசு அளிக்கிறது. தமிழை போல ஒரு தொன்மையான மொழியை நான் பார்த்ததில்லை என்று மோடி கூறியிருக்கிறார்.

காமராஜரை புகழ்ந்து பேசுகிறார். பணமதிப்பிழக்கம் நேரத்தில் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றியதை காமராஜர் போன்றவர்கள் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

கேள்வி:-பொதுவாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்ட நிலையில், உங்களுக்கு கவர்னர் பதவி கிடைத்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:-ஆர்.எஸ்.எஸ். பின்புலம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கை எனக்கு பிடித்துள்ளது. அவர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். நான் டாக்டராக இருந்தபோது, ஒரு நோயாளிக்கு ரத்தம் தேவைப்பட்டது, ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்த ஒருவர் தான் ரத்தம் கொடுத்தார். அப்போது இருந்தே ஆர்.எஸ்.எஸ். கொள்கை மீது ஈர்ப்பு ஈடுபட்டது. அவர்கள் மக்களுக்காக பணியாற்றுபவர்கள்.

கேள்வி:-தெலுங்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்கிறதா?

பதில்:-கண்டிப்பாக, தெலுங்கை ஒரு வாரத்தில் கற்றுக்கொள்வேன். எனக்கு 30 நாள் கூட தேவையில்லை. தாய்மொழி பற்றுடன், தேசிய தோழமையுடன், தெலுங்கில் பேசுவேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story