சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி ராஜினாமா


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி ராஜினாமா
x
தினத்தந்தி 7 Sept 2019 1:08 PM IST (Updated: 7 Sept 2019 1:08 PM IST)
t-max-icont-min-icon

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைத்தார்.

சென்னை,

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் வி.கே.தகில் ரமாணி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தகில் ரமாணியை, மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை எடுத்தது.  இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இந்த இடமாற்ற முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தகில் ரமாணி, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பினார். ஆனால், இந்தக் கோரிக்கையை மூத்த நீதிபதிகள் குழு அண்மையில் நிராகரித்து விட்டது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்  தலைமை நீதிபதி தகில் ரமாணி ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைத்தார். ராஜினாமா கடிதத்தின் நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கும் அனுப்பி வைத்தார்.

Next Story