இஸ்ரோவின் நோக்கம் விரைவில் வெற்றிபெறும் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
இஸ்ரோவின் நோக்கம் விரைவில் வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு பொதுமக்களும், பிரபலங்கள் பலரும் சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு ஆதரவாக டுவீட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலக நாடுகள் வியந்து பார்க்கும் வண்ணம், விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய திருநாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இதுவரை ஏராளமான சரித்திர சாதனைகளை படைத்து இஸ்ரோ உச்சத்தை எட்டியுள்ளது.
சந்திரயான் - 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவியை நிலவில் இறங்க வைக்கும் முயற்சியில் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, கண் துஞ்சாது உழைத்த இஸ்ரோவின் தலைவர் திரு.சிவன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக பணியாற்றிய விஞ்ஞானிகள் அனைவருக்கும் தமிழக மக்களின் சார்பாக எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“ எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப்பெறின்”
என்ற திருவள்ளுவரின் வைர வரிகளை மனதில் நிறுத்தி, குறிக்கோளை எட்டிட மேலும் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் பணியாற்றிட வேண்டும் என்ற இஸ்ரோவின் நோக்கம் விரைவில் வெற்றி பெறும். சந்திரனை நோக்கி சாதனைகள் படைக்க முயலும்போது சந்திக்கும் சில சிறு சோதனைகளை வெற்றிக்கான படிக்கட்டுகளாக கருதி, சவால்களை சமாளித்து, விரைவில் சந்திரனை அடைந்து சகாப்தம் படைக்கவிருக்கும் இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
#WeAreProudOfYouISRO#IndiaWithISROpic.twitter.com/uL3exAjD1K
— O Panneerselvam (@OfficeOfOPS) 7 September 2019
Related Tags :
Next Story