விருப்ப நிதியில் இருந்து 2,585 குழந்தைகளுக்கு ரூ.43 லட்சம் பொருட்களை கவர்னர் வழங்கினார்


விருப்ப நிதியில் இருந்து  2,585 குழந்தைகளுக்கு ரூ.43 லட்சம் பொருட்களை கவர்னர் வழங்கினார்
x
தினத்தந்தி 8 Sept 2019 4:45 AM IST (Updated: 8 Sept 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

விருப்ப நிதியில் இருந்து 2,585 குழந்தைகளுக்கு ரூ.43 லட்சம் மதிப்பிலான பொருள் உதவிகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

சென்னை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தன்னுடைய விருப்ப நிதியில் இருந்து ஆதரவற்றோர் இல்லம், குழந்தைகள் இல்லம், மனநலம் குன்றிய குழந்தைகள் இல்லம் உள்ளிட்ட 18 கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த 2 ஆயிரத்து 585 குழந்தைகள் மற்றும் அந்த அமைப்புகளில் சேவையாற்றியவர்களுக்கு ரூ.43 லட்சம் மதிப்பிலான உதவிகளை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.

புத்தக பைகள், சைக்கிள்கள், சீருடைகள், நாற்காலிகள், சமையல் பாத்திரங்கள், மின்விசிறி, இரும்பு பீரோ, டி.வி., சக்கர நாற்காலி, விளையாட்டு உபகரணங்கள், தையல் எந்திரம், கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

பன்வாரிலால் அறிவுரையின்படி அவருடைய கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் குழந்தைகளை மழையில் இருந்து பாதுகாப்பதற்காக சிறப்பு பந்தலுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதையடுத்து உதவிகளை பெற்ற குழந்தைகளுக்கும், அவர்களுடைய ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கும் தேனீர் விருந்தும் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பன்வாரிலால் புரோகித் பேசுகையில், “தேவைப்படுபவர்களுக்கு வாழ்க்கை துணையாக பயன்படும் உபகரணங்கள் பெரிய அளவில் ராஜ் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்குவது இதுதான் முதல் முறையாகும். இங்கு வந்திருக்கும் மாணவச் செல்வங்கள் செழுமைக்கான பாதையை அடைவதற்கு கல்வி என்ற விளக்கு ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. நன்றாக படித்து, உங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு சவாலை கையில் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அடைந்துவிடலாம்”. என்றார்.

Next Story