மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால்: 2 நாள் சோதனை அடிப்படையில் அண்ணா சாலை இருவழி பாதையாக மாற்றம் - போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு


மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால்: 2  நாள் சோதனை அடிப்படையில் அண்ணா சாலை இருவழி பாதையாக மாற்றம் -  போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2019 7:54 PM GMT (Updated: 10 Sep 2019 7:54 PM GMT)

மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால் 2 நாள் சோதனை அடிப்படையில் அண்ணா சாலை இருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அண்ணாசாலையில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்த நிலையில் அண்ணாசாலை ஜி.பி.ரோடு முதல் ஒயிட்ஸ் ரோடு வரை மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் 11-ந் தேதி (இன்று) மற்றும் 12-ந் தேதி (நாளை) ஆகிய 2 நாட்கள் சென்னை போக்குவரத்து போலீசாரால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த நாட்களில் அனைத்து வாகன ஓட்டிகளும் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்களை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

* அண்ணாசாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழி பாதையாக மாற்றப்படுகிறது.

* தற்போது ஜி.பி.ரோட்டில் நடைமுறையில் உள்ள ஒருவழி பாதை மாற்றியமைக்கப்பட்டு ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது. மாறாக வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிகூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.

* ஓயிட்ஸ் ரோடு இருவழி பாதையாக மாற்றப்படுகிறது

* ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை நோக்கியும், அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிகூண்டை நோக்கியும் ஒயிட்ஸ் ரோட்டில் அனுமதிக்கப்படுகிறது.

* ஸ்மித் ரோடு ஒருவழி பாதையாகவே முன்பு இருந்தது போன்றே ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதிக்கப்படுகிறது.

* அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

* அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி. மற்றும் டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம்.

* அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் வலது புறம் செல்லலாம்.

* பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.ரோடு மற்றும் ஒயிட்ஸ் ரோடு வழியாக அண்ணாசாலை செல்லலாம்.

* ராயப்பேட்டை அரசு மருத்துவமணையில் இருந்து (வெஸ்ட்காட் ரோடு) அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிகூண்டு வழியாக ஒயிட்ஸ் ரோடு மற்றும் ஜி.பி.ரோடு வழியாக செல்லலாம்.

* பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை மற்றும் அண்ணா மேம்பாலம் செல்லலாம்.

* பின்னி சாலையில் இருந்து பாரதி சாலை செல்ல பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி ஒயிட்ஸ் ரோடு மற்றும் ராயப்பேட்டை மணிகூண்டு வழியாக செல்லலாம்.

* பின்னி சாலையில் இருந்து ஒயிட்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று ஒயிட்ஸ் ரோட்டுக்கு செல்லலாம்.

* கிரீம்ஸ் சாலையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லவேண்டிய வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி அண்ணா மேம்பாலம் மற்றும் ஒயிட்ஸ் சாலை செல்லலாம்.

* அண்ணாசாலையில் இருந்து ஸ்மித் ரோடு வழியாக ஒயிட்ஸ் ரோடு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

* ஓயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.க. சாலையில் இடதுபுறம் திரும்பி பின்னர் சத்யம் தியேட்டர், கான்டான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story