ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் நேருக்குநேர் வந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு


ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் நேருக்குநேர் வந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Sep 2019 10:30 PM GMT (Updated: 10 Sep 2019 9:43 PM GMT)

காட்பாடி அருகே ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் நின்றது. நேருக்கு நேர் வந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் மின்சார ரெயில் காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது. காலை 8.20 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வரவேண்டும். ஆனால் முன்னறிவிப்பு ஏதுமின்றி 8.12 மணிக்கு ஜாப்ராப்பேட்டையில் நிறுத்தப்பட்டது. நீண்டநேரமாகியும் ரெயிலை எடுக்க வில்லை. இதனால் பயணிகள் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது அதே தண்டவாளத்தில் சற்று தொலைவில் வேறு ஒரு ரெயில் நின்று கொண்டிருந்தது. ஒரே தண்டவாளத்தில் 2 ரெயில்கள் இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் அவர்கள் அந்த ரெயில் நின்ற இடத்துக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அந்த ரெயில் சென்னைக்கு குடிநீர் ஏற்றிச்செல்லும் வேகன் ரெயில் என்பதும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனை பயணிகள் தங்களது செல்போனில் படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனால் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் ரெயில் வந்து நின்றதாகவும், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தகவல் வைரலானது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், சமூக வலைதளங்களில் பரவிய தகவல் வதந்தி என்பது அவர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் ஏற்றிக்கொண்டு வேகன் ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து அதே தண்டவாளத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் மின்சார ரெயில் பின்னால் சென்றது. வாலாஜா அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் காட்பாடி அருகே ஜாப்ராப்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டது. குடிநீர் ஏற்றி சென்ற வேகன் ரெயிலுக்கு இருபுறமும் என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.

வேகன் ரெயிலுக்கு பின்பக்கமாக பொருத்தப்பட்டிருந்த என்ஜினை பார்த்த மின்சார ரெயிலில் வந்த பயணிகள் நேருக்கு நேர் ரெயில்கள் வந்திருப்பதாக நினைத்து அச்சப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு சிக்னல் கோளாறு மட்டுமே காரணம். பின்னர் 20 நிமிடம் தாமதமாக ரெயில்கள் புறப்பட்டு சென்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story