41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; 37,300 பேருக்கு வேலைவாய்ப்பு வெளிநாடு பயணம் பற்றி - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை


41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; 37,300 பேருக்கு வேலைவாய்ப்பு வெளிநாடு பயணம் பற்றி - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
x
தினத்தந்தி 10 Sep 2019 10:15 PM GMT (Updated: 10 Sep 2019 10:02 PM GMT)

வெளிநாடுகளில் உள்ள 41 நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ரூ.8,830 கோடி மதிப்பீட்டிலான முதலீடு ஈர்க்கப்பட்டது என்று வெளிநாடு பயணம் பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வெளிநாடுகளில் உள்ள நகர உட்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்தவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய்க்கு கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை அரசு முறை பயணம் மேற்கொண்டேன்.

ஆகஸ்டு 28-ந்தேதியன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் சென்று, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடுகளை கண்டறிந்து, அதை தமிழ்நாட்டில் செயல்படுத்த, சர்வதேச திறன் மேம்பாட்டு நிறுவனத்துடனும், தமிழ்நாட்டில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவ கிங்ஸ் மருத்துவமனையுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

இங்கிலாந்து நாட்டில் சுபோல்க் நகரத்தில் என்ஜென் நிறுவனம், மரபு சாரா எரிசக்தியான சூரிய எரிசக்தி, காற்றாலை எரிசக்தி ஆகியவற்றை மின்கட்டமைப்புடன் இணைக்கும் வழிமுறைகளை நான் பார்வையிட்டேன். மேலும், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துதல், அந்நோய்களை கையாளும் வழிமுறைகள் தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்தானது. அத்துடன், லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகளை பார்வையிட்டு, அந்நிறுவனம் பின்பற்றும் நுட்பமான வழிமுறைகளை தமிழ்நாட்டிலுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊர்திகளில் நடைமுறைப்படுத்த உள்ளோம்.

ஆகஸ்டு 29-ந்தேதியன்று லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்ட அரங்கில், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ள சாத்தியக்கூறுகளை பற்றி எடுத்துக்கூறி, அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்ய கோரிக்கை விடுத்தேன்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தொடர்ந்து 2-ந்தேதியன்று அமெரிக்க நாட்டின் பபல்லோ கால்நடை பண்ணைக்கு சென்று, அங்கு அதிக பால் தரக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி உடைய கலப்பின மாடுகளை உருவாக்கும் தொழில்நுட்பம், பால் மற்றும் இதர பொருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, இந்த புதிய தொழில்நுட்பங்களை, சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்காவில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை கேட்டறிந்தேன்.

3-ந்தேதியன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ரூ.2,780 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம், தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும், நாப்தா கிராக்கர் யூனிட்டுடன் கூடிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஹால்தியா பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தினர் என்னை சந்தித்து ஆலோசனை செய்தனர். அதனைத் தொடர்ந்து, நியூயார்க் நகரில், உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கவும், “யாதும் ஊரே” என்ற புதிய திட்டத்தை தொடக்கி வைத்தேன்.

சான் ஹீசே நகரில் 4-ந்தேதியன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், ரூ.2,300 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் 6,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்

தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோருக்கு தேவையான உதவிகள் அளிக்க அமெரிக்க தொழில் முனைவோர் அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள டிஜிட்டல் ஆக்சலரேட்டர் திட்டத்தை தொடக்கி வைத்தேன். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு தொழில் முனைவோருக்கு அவர்கள் தொடங்கும் புதுத்தொழிலுக்கு தேவையான நிதியில் 10 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும். இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதோடு சான்ஹீசே நகரில் “யாதும் ஊரே” திட்டத்தையும் தொடக்கி வைத்தேன்.

5-ந்தேதியன்று அமெரிக்கா நாட்டின், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்திற்கு சென்று, சுற்றுப்புற சூழல்களை பாதுகாக்கும் வகையில் அந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்கள், பாட்டரிகள், எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆகிய பணிகளை பார்வையிட்டேன். அப்போது, இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தேன்.

மேலும், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதரால் உருவாக்கப்பட்டுள்ள ப்ளூம் எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டு, மாசில்லா எரிசக்தியை எளிய முறையில் தயாரிப்பது குறித்தும், அத்தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும், அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தேன்.

6-ந்தேதியன்று லாஸ் ஏஞ்சல்ஸ், அனஹெய்ம் நகர மேயர் சித்து என்னை வரவேற்று அங்குள்ள கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீராக்கும் மையத்தை காண்பித்தார். கழிவுநீர் சுத்திகரிப்பில், சிறந்த தொழில்நுட்பத்தை அங்கு பயன்படுத்தி வருகிறார்கள். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுசுழற்சி செய்து, கழிவறை, தோட்டங்கள், மரங்களுக்கு நீர் பாசனம் செய்யவும், ஏரிகளில் தேக்கி நிலத்தடி நீரை செரிவூட்டி, அந்த நிலத்தடி நீரை குடிநீருக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் கண்டறிந்தேன்.

இதுபோன்று, கழிவுநீரை சுத்திகரித்து, மறுசுழற்சி செய்தால், சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் நன்னீர் தேவை குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும் என்பதால், சோதனை அடிப்படையில் ஒரு மாதிரி சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க அனஹெய்ம் நகராட்சி மேயர் அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளார். அதனடிப்படையில், தமிழ்நாட்டில் கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக்கும் ஒரு மாதிரி அலகை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, 9-ந்தேதியன்று துபாய்க்கு சென்று, ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துறையின் கீழ் இயங்கும் பிசினஸ் லீடர்ஸ் போரம் என்ற அமைப்பும், இந்திய துணை தூதரகமும் இணைந்து நடத்திய துபாய் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டேன்.

இந்த கூட்டத்தில், ரூ.3,750 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 10 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதைத்தொடர்ந்து, துபாயில் உள்ள தொழில் முனைவோர்களோடு நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் தொடங்கிட அழைப்பு விடுத்தேன்.

இந்த வெளிநாட்டு பயணத்தின் மூலமாக நான் நேரடியாக கண்டறிந்த பல திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும், கிராமங்கள் மற்றும் நகரங்களின் கட்டமைப்புகளையும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச்செய்ய, இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்த சுற்றுப்பயணம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய உதவிகரமாக இருந்த வெளிநாடுவாழ் தமிழ் சொந்தங்கள், பிற தொழில் அமைப்புகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வெளிநாடு வாழ் தன்னார்வலர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி.

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய்க்கு சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, மொத்தம் 8,830 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலமாக 37 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தொழில் நிறுவனங்களுக்கு தொழில்கள் தொடங்குவதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் எனது அரசு விரைந்து செய்து கொடுக்கும்.

Next Story