தங்கம் விலையை கட்டுப்படுத்துவது எளிது அல்ல: மோட்டார் வாகன துறையில் தேக்க நிலையை சரி செய்ய துரித நடவடிக்கை - சென்னையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி


தங்கம் விலையை கட்டுப்படுத்துவது எளிது அல்ல: மோட்டார் வாகன துறையில் தேக்க நிலையை சரி செய்ய துரித நடவடிக்கை - சென்னையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
x
தினத்தந்தி 11 Sep 2019 12:15 AM GMT (Updated: 10 Sep 2019 10:55 PM GMT)

தங்கம் விலையை கட்டுப்படுத்துவது எளிது அல்ல என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மோட்டார் வாகன துறையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சென்னை,

பா.ஜ.க. அரசு தொடர்ந்து 2-வது முறையாக பதவி ஏற்று 100 நாட்கள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்த அரசு மேற்கொண்ட உறுதியான செயல்பாடுகள் குறித்து மத்திய மந்திரிகள் நாடு முழுவதும் எடுத் துரைத்து வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் முயற்சிகள் மற்றும் உறுதியான செயல்பாடுகள் குறித்து சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், மத்திய அரசின் 100 நாள் சாதனை புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டு இருக்கிறது. அரசியல் சட்டப்படி, 370-ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல், அரசியல் சட்டப்பிரிவு 35(ஏ)-யை யும் ரத்து செய்தது.

காஷ்மீரில் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளே ஆதரிக்கின்றன. சட்டங்கள் மூலம் அனைவரும் ஒரே மாதிரியான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தின் சமூக பொருளாதார கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றும் ஒரு அங்கம் தான், பொதுத்துறை வங்கிகளை இணைப்பது ஆகும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான அடிப்படை உள்கட்டமைப்பு வசதி திட்டங்களை கொண்டு வருவதற்கு ஒரு சிறப்பு படை (ஸ்பெஷல் ஸ்குவார்டு) அமைக்கப்பட்டு இருக்கிறது.

இவர்கள் ஆராய்ந்து, உடனடியாக எந்தெந்த துறையில் உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்று அறிந்து முதற்கட்டமாக நிதி ஒதுக்குவார்கள். இதனால் நாட்டின் வளர்ச்சி மேம்படும்.

மின்சார வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படியான விலையில் கிடைக்கும் வகையில் அதன் மீதான சரக்கு சேவை வரியை நீக்கி இருக்கிறோம். அதேபோல், பயன்பாட்டு கட்டணத்தையும் நீக்கியுள்ளோம். முத்தலாக் நடைமுறையை ஒழித்து இருக்கிறோம். குழந்தைகள் உரிமையை பாதுகாக்க போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்து இருக்கிறோம்.

வளர்ச்சி திட்டங்களான அனைவருக்கும் வீடு, மின் இணைப்பு, குடிநீர் மற்றும் சமையல் எரிவாயு சென்றடையாதவர்களுக்கு சென்றடைய செய்து வருகிறோம். நடை முறைக்கு தேவையற்ற, ஊழலுக்கு வழிவகுத்த 58 தேவையில்லாத சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.

சந்திரயான்-2 திட்டத்தில் 99.9 சதவீத நோக்கம் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த திட்டத்துக்கு அரசு இயன்ற வரை ஆதரவு அளித்தது. இனிமேலும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மோட்டார் வாகன உற்பத்தி முடங்கி போய் இருக்கிறது. இந்த சரிவுக்கான காரணம் என்ன?. இதற்கு மத்திய அரசின் நடவடிக்கை என்ன?

பதில்:- மோட்டார் வாகன உற்பத்தி துறை சார்ந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கருத்துகளை கேட்டபின்னர், சில அறிவிப்புகள் வெளியிடப்படும். தேக்க நிலையை சரி செய்ய தீவிர நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு வரை வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரி பாகங்களின் உற்பத்தி ஆகிய தொழில்கள் நல்ல வளர்ச்சியில் தான் இருந்தன. பி.எஸ்.6 வாகனத்துக்கு நகர்வு, பதிவு கட்டணம் உயர்வு, பணம் வைத்திருப்பவர்கள் புதியதாக கார் வாங்குவதை விரும்பாமல் மெட்ரோ ரெயில் மற்றும் ஊபர், ஓலா போன்ற வாடகை கார்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டு இருக்கிறது.

கேள்வி:- வாகனங்களுக் கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுமா?

பதில்:- ஜி.எஸ்.டி. கூட்டம் வருகிற 20-ந் தேதி கூடுகிறது. அதில் என்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. வாகன உற்பத்தி துறை சார்ந்தவர்களுடைய கருத்துகளின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு எடுக்கும்.

கேள்வி:- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) சதவீதம் குறைந்து இருக்கிறதே....

பதில்:- கடந்த காலங்களிலும் இது போல் குறைந்து இருக்கிறது. அதுபற்றி இப்போது பேச நான் விரும்பவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் ஏற்றம் இறக்கம் என்பது வழக்கமான ஒன்றுதான். அடுத்த காலாண்டு வளர்ச்சியை உயர்த்த முழுக்கவனம் செலுத்தி வருகிறோம். அதற்கான இலக்கை இப்போது சொல்ல முடியாது.

கேள்வி:- ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு நிதி பெற்றது பற்றி வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்களே?

பதில்:- ரிசர்வ் வங்கியின் வல்லுநர்கள் குழுதான், பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான விதிமுறைகளை வகுக்கிறார்கள். சிக்கலான நேரங்களில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து நிதியை பெறுவதில் எந்த தவறும் இல்லை. இதனால் எந்த பின்னடைவும் ஏற்படாது. எல்லா ஆட்சிகளிலும் இதுபோன்று பணம் பெறப்பட்டு இருக்கிறது.

கேள்வி:- தங்கத்தின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியுமா?

பதில்:- தங்கத்துக்கான மூலப்பொருள் இந்தியாவில் இல்லை. இறக்குமதியை நம்பித்தான் சார்ந்து இருக்கிறோம். இறக்குமதி, டாலர் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றின் அடிப்படையில் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயம் செய்யப்படும் தங்கம் விலையை, மத்திய அரசு கட்டுப்படுத்துவது எளிது அல்ல. ஆபரணத்துக்காக மட்டும் தங்கம் பயன்படுத்துவது இல்லை. முதலீட்டுக்காகவும் பயன்படுகிறது.

கேள்வி:- சென்னை-ரஷியா இடையே கடல்வழி போக்குவரத்துக்கான ஒப்பந்தத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- இந்த போக்குவரத்தினால் சென்னை துறைமுகத்தில் இறக்குமதி அதிகரிக்கும். இதனால் இங்குள்ள பொருளாதாரம் பன்மடங்கு உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி:- பா.ஜ.க. அரசின் தேர்தல் வாக்குறுதியான வேலைவாய்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறதா? வாகன உற்பத்தி பாதிப்பால் பலர் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். வேலை இல்லாமல் போய்விடுமோ என்று மக்கள் அச்சப்படுகிறார்களே?

பதில்:- வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க. அறிவித்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு தான் இருக்கின்றன. உருவாக்கவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முத்ரா கடன் உதவி திட்டம் மூலம் பலர் பயனடைந்த போதிலும், முறைசாரா அமைப்புகளில் வேலைவாய்ப்புகள் பெற்றவர்களின் புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. முறைசார்ந்த அமைப்புகளில் வேலைவாய்ப்புகள் பெற்றவர்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமே இருக்கின்றன. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

இந்த பேட்டியின் போது பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் ஏ.மாரியப்பன் உடன் இருந்தார்.

Next Story