சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணம்


சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணம்
x
தினத்தந்தி 11 Sep 2019 10:00 PM GMT (Updated: 11 Sep 2019 6:32 PM GMT)

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணம் நடந்தது.

சென்னை, 

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணம் நடந்தது.

நினைவிடத்தில் திருமணம்

சென்னை சிந்தாமணியில் உள்ள கூட்டுறவு சிறப்பு அங்காடி இயக்குனர் எஸ்.பவானிசங்கர். இவர் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசியான இவர் தனது மகனின் திருமணத்தை ஜெயலலிதா சமாதியில் வைத்து நடத்த அ.தி.மு.க. தலைமைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அ.தி.மு.க. தலைமை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று தனது மகன் எஸ்.பி.சாம்பசிவராமன் - ஆர்.தீபிகா ஆகியோரது திருமண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

சுற்றி வந்தனர்

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த இந்த திருமண நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் வேத மந்திரங்கள் - மேள தாளங்கள் முழங்க, ஜெயலலிதாவிடம் உதவியாளராக பணி புரிந்த பூங்குன்றன் எடுத்து கொடுத்த தாலியை மணமகன், மணமகள் கழுத்தில் கட்டினார். இதில் இரு வீட்டார் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். பின்னர் மணமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை சுற்றி வந்து வணங்கினர்.

ஆசி

இதுகுறித்து பவானிசங்கர் கூறுகையில், “ஜெயலலிதா நினைவிடத்தில் எனது மகன் திருமணம் நடந்துள்ளதால், ஜெயலலிதா ஆன்மா நிச்சயம் மணமக்களை ஆசீர்வதித்திருக்கும்”, என்றார்.

திருமணத்தையொட்டி ஜெயலலிதா நினைவிடம் நேற்று இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மணிமண்டபம் கட்டும் பணி காரணமாக, ஜெயலலிதா நினைவிடத்தில் கடந்த சில மாதங்களாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த திருமணத்தையொட்டி மெரினாவுக்கு வந்த பெரும்பாலானோர் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று பார்த்து செல்ல முடிந்தது.

Next Story