அதிக அபராதம், சிறைத் தண்டனையுடன் கூடிய புதிய மோட்டார் வாகன சட்டம், தமிழகத்தில் அமலாவது எப்போது?


அதிக அபராதம், சிறைத் தண்டனையுடன் கூடிய புதிய மோட்டார் வாகன சட்டம், தமிழகத்தில் அமலாவது எப்போது?
x
தினத்தந்தி 11 Sep 2019 7:30 PM GMT (Updated: 11 Sep 2019 7:14 PM GMT)

அதிக அபராதம், சிறைத்தண்டனையுடன் கூடிய புதிய மோட்டார் வாகன சட்டம், தமிழகத்தில் எப்போது அமலாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை, 

அதிக அபராதம், சிறைத்தண்டனையுடன் கூடிய புதிய மோட்டார் வாகன சட்டம், தமிழகத்தில் எப்போது அமலாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கூடுதல் கவனம்

இந்தியா முழுவதும் மோட்டார் வாகன புதிய சட்டம்-2019, கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு ரூ.50, ரூ.100 என வசூலிக்கப்பட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை, பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

மோட்டார் வாகன புதிய சட்டம் இன்னும் அமலுக்கு வராத தமிழகத்தில் கூட வாகன ஓட்டிகள் தங்களது நிலையை சரிப்படுத்திக் கொண்டுவிட்டனர். வாகன வேகம், ஹெல்மெட் அணிதல், சீட் பெல்ட் அணிதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர்.

ஏனென்றால், புதிய சட்டம் அமலாகியுள்ள பல மாநிலங்களில் இருந்து கிடைக்கப் பெறும் தகவல்கள் அனைவரையும் உஷார்படுத்திவிட்டன. அபராதத் தொகையை மிகக் கடுமையாக உயர்த்தியது சரியா? தவறா? என சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

புதிய அபராதங்கள்

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை செலுத்தும்போது ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத ஜெயில் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

இதே குற்றத்தை இரண்டாம் முறை செய்தால் ரூ.4 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத ஜெயில் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

தகுதி இழப்பு செய்த பிறகு வாகனத்தை ஓட்டினால் விதிக்கப்பட்ட ரூ.500 அபராதம், ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுவிட்டது. அபாயகரமாக வாகனத்தை ஓட்டுவதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் அபராதத்தோடு 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. போக்குவரத்து சீராகச் செல்ல இடையூறாக இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

போக்குவரத்துக்கான அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமல் போனாலும், அவர்கள் கேட்கும் தகவல்களை கூறாமல் இருந்தாலும் ரூ.2 ஆயிரம் அபராதம் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விரைவில் அமல்

அந்த வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் உள்ள 63 தண்டனைப் பிரிவுகளில் 26 பிரிவுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழகத்திலும் விரைவில் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு அவை அமலுக்கு வரவுள்ளன என்று அதிகாரி ஒருவர் கூறினார். ஆனாலும் சில இடங்களில் கூடுதல் அபராதத் தொகை ஏற்கனவே வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.

தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இந்த திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் விபத்தினால் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கையை 7,769-ல் இருந்து 3,572-ஆக குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

போலீசாருக்கு 2 மடங்கு அபராதம்

தமிழகத்தில் உயிரிழப்புக்கு ஏதுவான விபத்து ஏற்படும் காரணங்களாக பெரும்பாலும், வாகனங்களின் அதிக வேகம், அபாயகரமாக வாகனத்தை செலுத்துதல், ரேசில் ஓட்டுவதுபோல் செல்லுதல், ஹெல்மெட் - சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல் போன்றவைதான் உள்ளன. எனவே அந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து விதிகளை மீறும் போலீசார், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆகியோரிடம் இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்க வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய மோட்டார் வாகன சட்டங்களை அமல்படுத்தும் நடைமுறைக்கான புதிய விதிகளை தமிழக அரசு வகுத்துள்ளது.

Next Story