அரசை விமர்சிக்காமல் இருந்தாலே போதும்: மு.க.ஸ்டாலின் பாராட்டு எங்களுக்கு தேவையில்லை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


அரசை விமர்சிக்காமல் இருந்தாலே போதும்: மு.க.ஸ்டாலின் பாராட்டு எங்களுக்கு தேவையில்லை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 11 Sep 2019 8:45 PM GMT (Updated: 11 Sep 2019 7:41 PM GMT)

‘தமிழக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சிக்காமல் இருந்தாலே போதும். அவருடைய பாராட்டு எங்களுக்கு தேவையில்லை’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை, 

‘தமிழக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சிக்காமல் இருந்தாலே போதும். அவருடைய பாராட்டு எங்களுக்கு தேவையில்லை’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை வந்த முதல்-அமைச்சர்

14 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் சேலம் சென்றார். அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நேற்று இரவு கார் மூலம் கோவை வந்தார். சென்னை புறப்படும் முன் கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய்க்கு பயணம் சென்றபோது அங்குள்ள தமிழ் சொந்தங்கள் அத்தனை பேரும், அன்போடு என்னை வரவேற்றனர். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நான் திரும்பிய போது சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்கும் மு.க.ஸ்டாலின் அவரது ஆட்சி காலத்தில் எத்தனை முறை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். எவ்வளவு வெளிநாட்டு முதலீடு ஈர்த்து உள்ளார். அவர் சொல்வது எல்லாம் பொய்யான செய்தி. தி.மு.க. ஆட்சி காலத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 26 ஆயிரம் கோடி தான் தமிழகத்தில் தொழில் முதலீடு வந்தது.

விமர்சனம்

ஆனால் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் 2015-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து, அதன் மூலம் ரூ.73 ஆயிரம் கோடிக்கு தொழில் தொடங்கப்பட்டுள்ளது. 67 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்வந்துள்ளது. ஒரு புரிந்துணர்வு போட்டால் உடனே அந்த திட்டத்தை தொடங்கி விட முடியாது. அந்த தொழிற்சாலைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த வேண்டும். அதற்கான நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டும், முழு பணத்தை வைத்துக்கொண்டு தொழில் செய்ய முடியாது.

வங்கியில் கடன் பெற்று தான் செய்ய முடியும். அதன்படி பெரிய தொழில் செய்ய வேண்டுமென்றால் 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகி விடும். சிறிய தொழில் தொடங்க வேண்டுமென்றால்கூட 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். அதுகூட தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் இன்று வரை எங்களை குறை சொல்வது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு வேலை.

ரூ.8,895 கோடி முதலீடு

தற்போதைய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது, தமிழகத்தில் சுமார் 8 ஆயிரத்து 895 கோடி ரூபாய் தொழில் முதலீடு செய்வதற்கு தொழில் அதிபர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். இன்னும் பல தொழில் அதிபர்கள் முன்வர உள்ளனர்.

அது தொடர்பாக தொழில் அதிபர்கள் தொடர்ந்து என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் பாராட்டு எங்களுக்கு தேவையில்லை. அவரது பாராட்டை வைத்துக்கொண்டா? இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டுக்குரியது தான். எனவே ஒரு திட்டத்தை தொடங்கும் போது உடனடியாக அதை நடைமுறைப்படுத்த முடியாது. அது அவருக்கு தெரியும். ஆனால் பாராட்டுவதற்கு அவருக்கு மனம் இல்லை. குறுகிய எண்ணம் கொண்ட ஒருவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.

இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த அத்திக்கடவு-அவினாசி திட்டம் ஆயிரத்து 682 கோடி ரூபாய் முழுக்க முழுக்க மாநில நிதியில் இருந்து நிறைவேற்ற ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணி தொடங்கப்பட்டு விட்டது. இதையெல்லாம் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Next Story