கடல் கடந்து மலர்ந்த காதல்: சிங்கப்பூர் பெண்ணை கரம் பிடித்த ஈரோடு என்ஜினீயர் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது


கடல் கடந்து மலர்ந்த காதல்: சிங்கப்பூர் பெண்ணை கரம் பிடித்த ஈரோடு என்ஜினீயர் தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது
x
தினத்தந்தி 11 Sep 2019 10:00 PM GMT (Updated: 11 Sep 2019 8:13 PM GMT)

சிங்கப்பூர் பெண்ணுக்கும் ஈரோட்டை சேர்ந்த என்ஜினீயருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

ஈரோடு,

சிங்கப்பூர் பெண்ணுக்கும் ஈரோட்டை சேர்ந்த என்ஜினீயருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

சிங்கப்பூரில் காதல்

ஈரோட்டை அடுத்த சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 35). பி.எச்.டி. படித்துள்ள இவர் சிங்கப்பூரில் காற்றாலை மின்சார உற்பத்தி நிறுவனத்தில் சீனியர் ஆராய்ச்சி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மோகன்குமாருக்கும் சிங்கப்பூரில் வசிக்கும் தனலட்சுமி என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

தனலட்சுமி குடும்பத்தினர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் ராசாம்பாளையத்தை சேர்ந்தவர்கள். ஆனால் 3 தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்கள். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரியவந்ததை தொடர்ந்து 2 பேரின் வீட்டிலும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார்கள்.

தமிழ் முறைப்படி திருமணம்

இதைத்தொடர்ந்து மோகன்குமாருக்கும், தனலட்சுமிக்கும் தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தார்கள். இதற்காக தனலட்சுமி வீட்டை சேர்ந்தவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கோவை வந்து தங்கியிருந்தார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை காங்கேயம்-சென்னிமலை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவர்களுடைய திருமணம் தமிழர் பாரம்பரிய முறையில் நடைபெற்றது.

மணமகன் பட்டு வேட்டி-சட்டையும், மணமகள் பட்டு புடவையும் அணிந்திருந்தார். அதன்பின்னர் முகூர்த்த நேரத்தில் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். சிவாச்சாரியர்கள் மந்திரம் ஓத உறவினர்கள், நண்பர்கள் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

பாரம்பரிய இசை பிடிக்கும்...

திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றும், டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ என்ற புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.

இதுபற்றி மணமகள் தனலட்சுமி கூறுகையில், ‘நாங்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், நான் சிங்கப்பூரில்தான் பிறந்து வளர்ந்தேன். தமிழகத்துக்கு வந்ததே இல்லை. தமிழகத்தின் மருதாணி, பாரம்பரிய இசை, மக்களின் அன்பான அணுகுமுறை, உபசரிப்பு ஆகியவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது’ என்றார்.

Next Story