மாநில செய்திகள்

இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி + "||" + At the Emanuel Sekaran Memorial Political party leaders pay tribute

இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
பரமக்குடி, 

நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இமானுவேல் சேகரன் நினைவுதினம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி நேற்று அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர்ராஜா மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

தியாகி இமானுவேல் சேகரன் தீண்டாமையை ஒழிக்க போராடியவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். 1950-ம் ஆண்டு விடுதலை இயக்கத்தை கண்டவர். 1954-ல் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தி அதற்காக போராடி வெற்றி கண்டவர்.

அவரது புகழ் ஓங்கி நிலைக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க.வும், தோழமை கட்சிகளும் இணைந்து அஞ்சலி செலுத்தி உள்ளோம். அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பது குறித்து தற்போது அரசு பொறுப்பில் உள்ளவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி.

அடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை நீங்கள் கேட்கும் கேள்வி மூலம் தெரிகிறது. இந்திய பொருளாதாரம் 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுதான் மோடி அரசின் 100 நாள் சாதனையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க. சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பா.ஜனதாவினரும், மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசாரும், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முருகநாதன் தலைமையில் அக்கட்சியினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநில துணை பொதுச்செயலளர் கனிவேந்தன் தலைமையிலும், த.மா.கா. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்பிரபு தலைமையிலும் அஞ்சலி செலுத்தினார்கள்.