ஜீவசமாதி அடையப்போவதாக கூறிய 80 வயது சாமியாரைக் காண குவியும் பக்தர்கள்


ஜீவசமாதி அடையப்போவதாக கூறிய 80 வயது சாமியாரைக் காண குவியும் பக்தர்கள்
x
தினத்தந்தி 12 Sep 2019 11:54 AM GMT (Updated: 12 Sep 2019 11:54 AM GMT)

சிவகங்கை அருகே ஜீவசமாதி அடையப்போவதாக கூறிய 80 வயது சாமியாரைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை கிராமத்தில் வசிப்பவர் இருளன். 80 வயதாகும் விவசாயியான இவருக்கு, மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.

அப்பகுதியில் ஜோதிடம் பார்ப்பதுடன் அருள்வாக்கும் கூறி வந்தார். கோவில்களுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டதால், சாமியார் என்று அவரை அந்த பகுதியினர் அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர் செப்டம்பர் 12-ஆம் தேதியான இன்று நள்ளிரவு முதல் 13-ஆம் தேதியான நாளை அதிகாலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப் போவதாக தெரிவித்துள்ளதுடன் அதற்கான இடத்தையும் குறித்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஒரு மாதமாக உணவு எதுவுமின்றி தண்ணீர் மட்டும் அருந்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை கேள்விப்பட்டு கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாசாங்கரை கிராமத்துக்கு வந்து அவரை வணங்கிச் செல்கின்றனர்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சிவகங்கையில் இருந்து ஷேர் ஆட்டோ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே சாமியார் ஜீவசமாதி அடையப்போவதாக கூறிய நேரம் நெருங்கி வருவதால் இருளன் சாமியாரின் நடவடிக்கைகளை அரசு அதிகாரிகளும், போலீசாரும் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story