பேனர் விழுந்து விபத்து இளம்பெண் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்


பேனர் விழுந்து விபத்து இளம்பெண் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 12 Sep 2019 3:55 PM GMT (Updated: 12 Sep 2019 3:55 PM GMT)

பேனர் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ  (23 வயது) கனடா செல்வதற்காக இன்று தேர்வு எழுதியுள்ளார்.  தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் போது சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது.

அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி படுகாயமடைந்தார். காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில்,  சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  கூறியிருப்பதாவது:- 

அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்! 

அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?  என பதிவிட்டுள்ளார்.

Next Story