மத்திய-மாநில அரசுகளின் அவலட்சணங்களை எடுத்துக்கூறி மக்களை விழிப்படையச் செய்யும் தூதுவர்களாக மாறவேண்டும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை


மத்திய-மாநில அரசுகளின் அவலட்சணங்களை எடுத்துக்கூறி மக்களை விழிப்படையச் செய்யும் தூதுவர்களாக மாறவேண்டும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 12 Sep 2019 10:45 PM GMT (Updated: 12 Sep 2019 7:24 PM GMT)

மத்திய-மாநில அரசுகளின் அவலட்சணங்களை எடுத்துக்கூறி மக்களை விழிப்படையச் செய்யும் தூதுவர்களாக மாறவேண்டும் என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகள், திட்டங்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தி ஜனநாயகத்தை காக்க வேண்டியது நம்முடைய இளைஞர்கள் ஒவ்வொருவரின் கடமை. இந்த அரசுகளின் அவலட்சணங்களை எடுத்துக்கூறி மக்களை விழிப்படையச் செய்யும் தூதுவர்களாக நாம் மாறவேண்டும். இந்த பணியை விரிவுபடுத்த, விரைவுபடுத்த தி.மு.க. சார்ந்த, சாராத இளைஞர்களை நோக்கி நாம் பயணத்தை தொடங்கியுள்ளோம்.

கடந்த மாதம் நடந்த இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும், நம் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலும் தி.மு.க. இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளோம்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்

செப்டம்பர் 14-ந்தேதி (நாளை) தொடங்கி, நவம்பர் 14-ந்தேதி வரையிலான 2 மாத காலத்தில் தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக முகாம்களை நடத்தி உறுப்பினர்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் தங்களை நம் இளைஞர் அணியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.

இந்த உறுப்பினர் சேர்ப்பு முகாமை உங்களின் பிரதிநிதியாக இருந்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வளாகத்தில் சனிக்கிழமை (நாளை) காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறேன். அதைத்தொடர்ந்து சைதாப்பேட்டையிலும் உறுப்பினர் சேர்ப்பு முகாமை தொடங்கி வைக்கிறேன்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் முகாம் தொடங்கும் அதேநேரம் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் நம் மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணியின் துணைச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் தலைமையில் முகாம் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story