மாநில செய்திகள்

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Court order dismissing case of ban on film

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்திற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

பிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, ஆர்யா, மோகன்லால், நடிகை சாயிஷா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘காப்பான்’. இந்த படத்தை ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில், ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘சரவெடி’ என்ற தலைப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கதை எழுதினேன். அந்த கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறினேன். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், சரவெடி கதையை ‘காப்பான்’ என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியுள்ளார். எனவே, ‘காப்பான்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

ஐகோர்ட்டில் தள்ளுபடி

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தை தயாரித்துள்ள ‘லைகா’ நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மனுதாரர் கூறும் ‘சரவெடி’ படத்தின் கதை வேறு, ‘காப்பான்’ படத்தின் கதை வேறு என்று கூறியிருந்தது.

இதேபோல் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘ என்னிடம் கதை சொன்னதாக கூறிய மனுதாரரை நான் பார்த்ததே இல்லை. எப்போதும் அடையாளம் தெரியாதவர்களிடம் நான் கதை கேட்க மாட்டேன். எனவே, இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரருக்கு அபராதம் விதிக்கவேண்டும். வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சதீஷ்குமார், ‘இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை’ என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இயக்குனர் மகிழ்ச்சி

இந்த தீர்ப்பு வெளியானதும், பத்திரிகையாளர்களுக்கு இயக்குனர் கே.வி.ஆனந்த் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டில் ‘காப்பான்’ படத்துக்கான கரு உருவானது. பிரதமரின் பாதுகாவலர்கள் பற்றிய ஒரு வரி கதைக்கு நானும், நாவல் ஆசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகரும் சேர்ந்து திரைக்கதை எழுதினோம். அதே வருடத்தில் கதையை பதிவு செய்தோம். ‘அனேகன், கவண்’ ஆகிய படங்களை முடித்து கொடுத்துவிட்டு, மீண்டும் ‘காப்பான்’ படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டோம்.

அந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு, இது என் கதை என்று ஜான் சார்லஸ் கூறுகிறார். சூர்யா கலப்பையுடன் நிற்பதையும், நதிநீர் பிரச்சினையை படத்தில் வைத்திருப்பதாகவும் கூறி கதை திருட்டு என்கிறார். பிரதமருக்கான பாதுகாப்புதான் எங்கள் கதையின் கருவாகும். கோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கு தொடர்வோம்...

அப்போது அருகில் அமர்ந்திருந்த வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் கூறும்போது, ‘எங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக, நான், லைகா புரொடக்‌ஷன்ஸ், இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வழக்கு தொடர்ந்தவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறோம்’ என்று கூறினார்.