பாம்பனில் 2-வது நாளாக செத்து கரை ஒதுங்கிய மீன்கள்


பாம்பனில் 2-வது நாளாக செத்து கரை ஒதுங்கிய மீன்கள்
x
தினத்தந்தி 12 Sep 2019 9:30 PM GMT (Updated: 12 Sep 2019 7:33 PM GMT)

கடல்நீர் இயல்பு நிலைக்கு மாறினாலும் பாம்பன் குந்துகால் பகுதியில் 2-வது நாளாக நேற்று மீன்கள் கொத்து கொத்தாக செத்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு நீடித்தது.

ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் முதல் குருசடை தீவு வரையிலான கடல்நீர் நேற்று முன்தினம் நிறம் மாறி பச்சையாக காட்சி அளித்தது. மீன்களும் இறந்து கரை ஒதுங்கின. கண்ணுக்கு தெரியாத ஒரு வகை பாசி, இனப்பெருக்கத்திற்காக தன் மகரந்த சேர்க்கையை கடலில் படரச் செய்ததால் தான் கடல்நீர் பச்சை நிறமாக மாறியிருப்பதாகவும், தானாகவே இயல்பு நிலைக்கு வந்துவிடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கடல்நீர் நேற்று இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் மீன்கள் செத்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்ததால் பரபரப்பு நீடித்தது. குறிப்பாக ஒரா, கிளி, மள்ஒரா, காரல், விலாங்கு, அஞ்சாலை உள்ளிட்ட பல வகை மீன்கள் இறந்து கடற்கரை முழுவதும் கிடந்தன.

அள்ளிச் சென்ற மீனவர்கள்

அந்த மீன்களை ஏராளமான மீனவர்கள், மீனவ பெண்களும் சேகரித்து, கருவாடாக்குவதற்காக அள்ளி சென்றனர். இதேபோல் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளும் நேரில் வந்து பார்வையிட்டதுடன், இறந்து கிடந்த பல வகை மீன்களை ஆராய்ச்சிக்காக எடுத்து சென்றனர்.

இது பற்றி மீனவர் முனியசாமி கூறியதாவது:-

40 ஆண்டுகளுக்கு மேலாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறேன். கடல் நீர் நிறம் மாறுவது சில நேரங்களில் ஏற்பட்டாலும் இது போன்று மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது கிடையாது. இதுவே முதல் முறை. ஆகவே பாம்பன் குந்துகால் பகுதியில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதற்கான காரணத்தை கண்டுபிடித்து மீனவர்களிடம் மீன்வளத்துறையும், மத்திய கடல் மீன்ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளும் விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story