ரூ.10 லட்சம் கேட்டு நர்சு கடத்தல் போலீசில் அண்ணன் புகார்


ரூ.10 லட்சம் கேட்டு நர்சு கடத்தல் போலீசில் அண்ணன் புகார்
x
தினத்தந்தி 13 Sep 2019 10:09 PM GMT (Updated: 13 Sep 2019 10:09 PM GMT)

ரூ.10 லட்சம் கேட்டு நர்சு கடத்தப்பட்டதாக போலீசில் அவருடைய அண்ணன் புகார் செய்து உள்ளார்.

பூந்தமல்லி,

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் விக்னேஷ்(வயது 24), மகள் வித்யா(22) இருவரும் சென்னையில் தங்கி உள்ளனர். விக்னேஷ், சிறுசேரியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்திலும், அவருடைய தங்கை வித்யா, தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாகவும் வேலை செய்து வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநள்ளாறில் உள்ள தனது நண்பரின் திருமணத்தில் கலந்துகொள்ள வித்யா சென்றுவிட்டார். திருமணம் முடிந்து நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து அரசு பஸ்சில் ஏறி விட்டதாகவும், காலையில் கோயம்பேடு வந்து விடுவதாகவும் தனது அண்ணனுக்கு செல்போனில் வித்யா தகவல் தெரிவித்தார்.

இந்தநிலையில் நேற்று காலை வித்யாவின் தந்தை ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட மர்மநபர்கள், “உங்கள் மகள் வித்யாவை நாங்கள் கடத்தி விட்டோம். ரூ.10 லட்சம் கொடுத்தால் அவரை உயிருடன் ஒப்படைப்போம். பணத்தை தயார் செய்து வையுங்கள்” என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டனர்.

சிறிது நேரத்தில் விக்னேசையும் தொடர்புகொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மர்மநபர்கள் மிரட்டினர். அப்போது அவர், “எனது தங்கை கடத்தப்பட்டதை நான் எப்படி நம்புவது?” என்றார்.

அதற்கு மர்மநபர்கள், வித்யாவிடம் செல்போனை கொடுத்து பேச வைத்தனர். போனில் பேசிய வித்யா, “மர்மநபர்கள் என்னை கடத்தி விட்டனர். அண்ணா என்னை சீக்கிரம் காப்பாற்று” என்று கதறினார். அதற்குள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், இதுபற்றி கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வித்யா கடத்தப்பட்டது குறித்தும், கடைசியாக வந்த செல்போன் இணைப்பு மற்றும் தற்போது மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் இணைப்பு எங்கு உள்ளது? என்பது குறித்தும் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் வித்யா உண்மையாகவே கடத்தப்பட்டாரா? அல்லது கடத்தல் நாடகம் ஆடுகிறாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story