மாநில செய்திகள்

‘பேனர்’ தொழிலை முடக்கி விட கூடாது - தமிழ்நாடு டிஜிட்டல் பிரிண்டிங் சங்கம் வேண்டுகோள் + "||" + Banner profession Dont be paralyzed Tamil Nadu Digital Printing Association request

‘பேனர்’ தொழிலை முடக்கி விட கூடாது - தமிழ்நாடு டிஜிட்டல் பிரிண்டிங் சங்கம் வேண்டுகோள்

‘பேனர்’ தொழிலை முடக்கி விட கூடாது - தமிழ்நாடு டிஜிட்டல் பிரிண்டிங் சங்கம் வேண்டுகோள்
பேனர் தொழிலில் 6 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த தொழிலை முடக்கி விட கூடாது என்று தமிழ்நாடு டிஜிட்டல் பிரிண்டிங் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் சுப நிகழ்ச்சிகள் என்றாலும், துக்க நிகழ்ச்சிகள் என்றாலும் ‘டிஜிட்டல்’ பேனர்கள் பிரதான இடம் பெறுகின்றன. குறிப்பாக அரசியல் கட்சிகள் நடத்தும் எந்த விழாவாக இருந்தாலும் புற்றீசல்கள் போன்று பேனர்கள் இடம் பெறுவது வழக்கம். போக்குவரத்துக்கு இடையூறு, விபத்துகளுக்கு வழிவகுத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு பேனர்கள் காரணமாக அமைகின்றன.


பேனர்கள் நடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு, சாலையில் செல்லும்போது பேனர்கள் சரிந்து வாகன ஓட்டிகள் பலியாகும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்ததால் சென்னை ஐகோர்ட்டு பேனர்கள் வைப்பதற்கு கெடுபிடி உத்தரவு விதித்தது.

ஆனால் இந்த உத்தரவை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியன் விளைவு, தற்போது பள்ளிக்கரணையில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ(வயது 23) பேனரால் விபத்தில் சிக்கி பலியாகி இருக்கிறார்.

தமிழகத்தில் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை சுபஸ்ரீ மரணம் உணர்த்தி இருக்கிறது. ‘பிளாஸ்டிக்’ பைகளுக்கு தடை விதித்தது போன்று டிஜிட்டல் பேனர்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.

துரதிருஷ்டவசமாக நடந்த இந்த சம்பவத்துக்காக பேனர் தொழிலை முடக்கி விட கூடாது என்று தமிழ்நாடு ‘டிஜிட்டல்’ பிரிண்டிங் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் எம். சுரேஷ் கூறியதாவது:-

சுபஸ்ரீ மறைவுக்கு எங்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். டிஜிட்டல் பேனர் தொழில் ஏற்கனவே நலிவடைந்து வரும் வேளையில், இந்த சம்பவம் மிகுந்த கவலை அளிக்கிறது.

பொதுவாக ‘பேனர்’ அடித்து கொடுப்பது மட்டும் தான் எங்கள் வேலை. அதை சாலையில் நடுவது எங்கள் வேலை இல்லை. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் பேனர் அச்சிட்ட கடைக்கு ‘சீல்’ வைத்திருக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை ஆகும்.

சென்னை ஐகோர்ட்டு வகுத்துள்ள விதிமுறையின்படி வாடிக்கையாளர்கள் பேனர்கள் வைப்பதற்கு போலீசாரிடம் முதலில் தடையில்லா சான்று பெற வேண்டும். பின்னர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

மாநகராட்சியை பொறுத்தவரையில் பேனர் வைப்பதற்கு அனுமதி கட்டணம் ரூ.250 ஆகும். முறையான அனுமதியுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நாங்கள் பேனர்கள் அச்சிட்டு வழங்குகிறோம். ஆனால் அரசியல் கட்சியினர் முறையான அனுமதி பெறாமல் நிர்ப்பந்திக்கிறார்கள். எனவே பேனர்கள் வைப்பதற்கு ‘ஆன்-லைன்’ மூலம் அனுமதி பெறும் முறையை அமல்படுத்தினால், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் எதிர்காலத்தில் நிச்சயம் நிகழாது. மேலும் இரங்கல் அஞ்சலி பேனர்கள் வைப்பதற்கு இந்த நடைமுறை எளிதாக அமையும்.

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் ‘டிஜிட்டல்’ பேனர்கள் அச்சிடும் கடைகள் உள்ளன. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். வேலையில்லா பிரச்சினையால் பட்டதாரி இளைஞர்கள், என்ஜினீயர்கள் பலரும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

ஓராண்டுக்கு சுமார் ரூ.750 கோடி வருமானம் நடக்கிறது. இதில் கடைகளுக்கு எல்.டி.இ. டிஜிட்டல் போர்டு அமைத்தல் போன்ற பணிகளும் அடங்கும். ‘டிஜிட்டல்’ பேனர் தொழிலுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.150 கோடி ஜி.எஸ்.டி. செலுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.