பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை - தமிழக அரசு எச்சரிக்கை


பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை - தமிழக அரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Sep 2019 11:30 PM GMT (Updated: 14 Sep 2019 7:45 PM GMT)

தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது.

சென்னை,

சென்னை பள்ளிக்கரணையில் நேற்று முன்தினம் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி சுபஸ்ரீ என்ற பெண் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. சாலையில் எத்தனையோ விபத்துகள் நடந்திருந்தாலும், சுபஸ்ரீயின் மரணம் அதிகாரிகளின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி விட்டது.

சுபஸ்ரீயின் மரணத்துக்கு சென்னை ஐகோர்ட்டு தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. பேனர் விவகாரத்தில் எத்தனையோ உத்தரவுகள் பிறப்பித்தும் அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை என்று ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் சுபஸ்ரீயின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், இனி பேனர் வைக்கக்கூடாது என்று தங்கள் கட்சியினருக்கு உத்தரவையும் பிறப்பித்து வருகின்றனர்.

‘சுபஸ்ரீ போல இனியும் ஒரு உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க அரசு இரும்புக்கரம் கொண்டு இந்த விவகாரத்தில் செயல்பட வேண்டும்’, என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குரல்கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பதற்கான தடை உத்தரவை கடுமையாக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த உத்தரவை முறையாக செயல்படுத்தும் வகையில் அதிகாரிகளுக்கு உரிய முறையில் அறிவுறுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளாட்சி அமைப்புகளின் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் டிஜிட்டல் பேனர் நிறுவக்கூடாது. இதுதொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்களுடன் மாவட்ட அளவில் கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த கூட்டத்தில் ஐகோர்ட்டின் உத்தரவு குறித்து எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.

ஐகோர்ட்டின் உத்தரவு மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி டிஜிட்டல் பேனர் நிறுவப்பட்டால், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் சம்பந்தப்பட்டோருக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

வாகன ஓட்டிகளை திசை திருப்பக்கூடிய மற்றும் பாதசாரிகளுக்கு தடையாக இருக்கக்கூடிய வகையில் பிரதான சாலைகளின் இருபுறங்கள், நடைபாதைகள், சாலையின் நடுப்பகுதி உள்ளிட்ட இடங்களிலும், பெரிய பெரிய வாகனங்களிலும் எந்தவொரு டிஜிட்டல் பேனரையோ, பதாகைகளையே அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் வைக்கப்பட கூடாது. அனுமதியின்றி நிறுவப்படும் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாயும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சாத்தியமா?

இதனைத்தொடர்ந்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் துரித நடவடிக்கையை கையாண்டு வருகிறார்கள். அதிகாரிகள் குழு வீதி வீதியாக சென்று பேனர் அகற்றும் முழு மூச்சாக ஈடுபடுகிறார்கள். தமிழக அரசின் இந்த எச்சரிக்கை உத்தரவு பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையிலேயே சாத்தியமாக அமையும்.

Next Story