இந்தியை ஏற்க மாட்டோம் தம்பிதுரை பேச்சு


இந்தியை ஏற்க மாட்டோம் தம்பிதுரை பேச்சு
x
தினத்தந்தி 16 Sep 2019 10:45 PM GMT (Updated: 16 Sep 2019 8:40 PM GMT)

அண்ணா வழியில் இருமொழி கொள்கையை ஏற்போம். இந்தியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தம்பிதுரை தெரிவித்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூரில், ஆலந்தூர் பகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்தியை ஏற்க மாட்டோம்

தமிழ் மொழி உள்பட 22 மொழிகளும் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்று குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. இந்திதான் இருக்க வேண்டும் என்று அமித்ஷா கூறுகிறார். இதை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளாது.

தமிழ்நாட்டையும், தமிழனையும் மொழியால் ஆதிக்கம் செலுத்தி அடிமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அண்ணாவை நினைவில் கொண்டு எதிர்ப்போம்.

இருமொழி கொள்கை திட்டத்தை சட்டமன்றத்தில் அண்ணா கொண்டு வந்தார். அவர் வழியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் தற்போதுள்ள எடப்பாடி அரசும் இருமொழி கொள்கையை ஏற்றுக்கொள்வோம். இந்தியை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அன்னிய மொழிதான்

இந்தியை மட்டும் கொண்டு வரவா? சுதந்திரம் வாங்கப்பட்டது. ஆங்கிலம் அன்னிய மொழி என்றால் இந்தியும் அன்னிய மொழிதான்.

கேரளா, கர்நாடகா, தெலுங் கானா, மேற்கு வங்காளத்திலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியா ஒன்றுதான். ஆனால் இந்தியை எதிர்க்கின்ற இயக்கமாக அ.தி.மு.க. இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் அம்மன் வைரமுத்து, பரணிபிரசாத், வரதராஜன், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story