மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா? பள்ளிக்கல்வி துறை பதில்


மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா? பள்ளிக்கல்வி துறை பதில்
x
தினத்தந்தி 16 Sep 2019 11:15 PM GMT (Updated: 16 Sep 2019 9:32 PM GMT)

மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா? என்பதற்கு பள்ளிக்கல்வி துறை பதில் அளித்துள்ளது.

சென்னை,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம், அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை தொடர்ச்சியாக 9 நாட்கள் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை விழிப்புணர்வு பேரணி, காந்தி மதிப்புகளை மையமாக கொண்டு பாட்டு, நாடகம், மாறுவேட போட்டி, காந்தி ஜெயந்தி விழா கொண்டாடுதல் உள்பட பல்வேறு நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் காந்தி பற்றிய வினாடி வினா போட்டி, ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கட்டுரை மற்றும் ஓவியம் வரைதல், 2.10.2020 அன்று பள்ளி அளவில் காந்திய மதிப்புகளில் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் உள்பட பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மேற்சொன்ன நிகழ்வுகள் நடத்தப்பட்டு, தொகுப்பு அறிக்கையாக மாநில திட்ட இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை இல்லையா?

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 23-ந்தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவு பெறுகிறது. அதன் பிறகு 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

மாநில திட்ட இயக்ககத்தின் அறிக்கையில் காலாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் காலாண்டு விடுமுறை இருக்கா? இல்லையா? என்று மாணவர்கள், பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

எந்த சம்பந்தமும் இல்லை

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ச.கண்ணப்பனிடம் கேட்டபோது, “காலாண்டு விடுமுறை உண்டு. மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ள நிகழ்வுகளில் விருப்பம் உள்ள மாணவர்கள் தானாக முன்வந்து கலந்து கொள்ளலாம். யாருக்கும் கட்டாயம் அல்ல. மாநில திட்ட இயக்ககத்தின் அறிக்கைக்கும், காலாண்டு விடுமுறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

Next Story