ஜல்லிக்கட்டு சிறிய போராட்டம்தான் “எங்கள் மொழிக்காக போராடினால் அது பன்மடங்கு பெரிதாக இருக்கும்” கமல்ஹாசன் கண்டனம்


ஜல்லிக்கட்டு சிறிய போராட்டம்தான் “எங்கள் மொழிக்காக போராடினால் அது பன்மடங்கு பெரிதாக இருக்கும்” கமல்ஹாசன் கண்டனம்
x
தினத்தந்தி 16 Sep 2019 11:00 PM GMT (Updated: 16 Sep 2019 10:29 PM GMT)

ஜல்லிக்கட்டு சிறிய போராட்டம்தான். எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால் அது பன்மடங்கு பெரிதாக இருக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

‘இந்தி மொழி தான் நாட்டை ஒன்றுபடுத்தும்’ என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தி திணிப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ, சட்டங்களோ இயற்றப்படும் பொழுது மக்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்துக்காக அல்ல ஜனநாயகத்துக்காக’ என்று குறிப்பிட்டு, ஒரு நிமிடம் 44 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

மொழிக்காக போராட்டம்

அந்த வீடியோ காட்சியில் கமல்ஹாசன் கூறியதாவது:-

பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக் கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும், கலாசாரமும் என்பதுதான். 1950-ல் இந்தியா குடியரசானபோது அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது.

அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது. ஜல்லிக் கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம். சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது.

திணிக்க நினைத்தால் குமட்டிவிடும்

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை. வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாசாரத்துக்கும், எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும், மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார்.

இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காணமுடியும்.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!

இவ்வாறு அந்த வீடியோவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

விமான நிலையத்தில் பேட்டி

விசாகப்பட்டினம் செல்லும் முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் எங்களது மொழி. அதை விட்டுக்கொடுக்க முடியாது. இந்தியா குடியரசாக மாற்றப்படும்போது மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவை பாதுகாக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. அதை மாற்ற முடியாது.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை கண்டிப்பாக ரத்துசெய்ய வேண்டும். உலகில் மாணவர்களுக்கு எப்படி கல்வி கற்றுத்தரவேண்டும் என்பதை மாற்றி சீர்திருத்தம் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் பின்நோக்கி நடந்துகொண்டு இருக்கிறோம்.

பிரிவினை ஏற்படுத்தும் முயற்சி

மொழியை புகுத்துவதன் மூலம் பிரிவினை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம். அல்லது செய்யும் தவறுகளை, பொருளாதாரம் கீழ் நோக்கி செல்வதை மக்கள் மறக்க வேறு பிரச்சினைகளை எடுத்து வைக்கிறார்களோ? என்று தெரியவில்லை.

தமிழ்நாடு எப்போதும் மொழியை போற்றுவதற்கும், தேவைப்பட்டால் போராடவும் தயாராக இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். எத்தனை மொழியை வேண்டுமானாலும் ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால் இதுதான் மொழி என்று ஏதாவது ஒன்றை திணித்தால் மறுத்து விடுவோம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட பள்ளி மாணவன் நான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story