முகலிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு


முகலிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
x
தினத்தந்தி 17 Sep 2019 6:06 AM GMT (Updated: 17 Sep 2019 6:06 AM GMT)

முகலிவாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவன் பலியான விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது.

சென்னை, 

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம், சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் செந்தில்(வயது 40). ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.  இவரது 14-வயது மகன் தீனா,   நேற்று முன்தினம் இரவு வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான தனது நண்பருடன் மொபட்டில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திடீரென பெட்ரோல் தீர்ந்து போனதால் இருவரும் மொபட்டை தள்ளியபடி பெட்ரோல் பங்க் நோக்கி முகலிவாக்கம், தனம்நகர் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அப்போது தோண்டிய பள்ளத்தில், பூமிக்கு அடியில் தெரு விளக்குகளுக்காக புதைக்கப்பட்டு இருந்த மின்சார கேபிளை மீண்டும் சரிவர மூடாமல் சென்று விட்டனர். இதனால் மின்சார கேபிள் வெளியே தெரிந்தபடி இருந்தது.

அந்த வழியாக சென்ற வாகனங்களால் அந்த மின்சார கேபிள் சேதம் அடைந்து இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அந்த பகுதியில் மழைநீரும் தேங்கி நின்றது.

சேதமடைந்த மின்சார கேபிளில் இருந்து மின்சாரம் கசிந்து, சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதை அறியாமல் அந்த வழியாக மொபட்டை தள்ளியபடி நண்பருடன் வந்த தீனா, மழைநீரில் கால் வைத்ததும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சுருண்டு விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அதிர்ஷ்டவசமாக அவரது நண்பர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின்கம்பியை சரியாக புதைக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக, மின்வாரிய உதவி பொறியாளர்கள் மீது மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்சன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி இந்த விவகாரத்தை முன்வைத்தார். முகலிவாக்கம் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும்படி வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்சன் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது என கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக மனுவாக தாக்கல்  செய்தால் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Next Story