நீதிபதி தஹில் ரமானியை பணியிட மாற்றும் பரிந்துரைக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு


நீதிபதி தஹில் ரமானியை பணியிட மாற்றும் பரிந்துரைக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
x
தினத்தந்தி 18 Sep 2019 6:48 AM GMT (Updated: 18 Sep 2019 9:41 AM GMT)

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை

சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தின் பரிந்துரைப்படி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு செல்ல மறுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி விலகல் கடிதம் அளித்து உள்ளார். கடிதம்   தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  அவரது அமர்வில் வழக்குகள் இதுவரை பட்டியலிடப்படவில்லை.

தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ததற்கு தமிழகத்தில் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று (தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க ஜனாதிபதி  செயலருக்கு தடை விதிக்க வேண்டும் என, வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

வழக்கறிஞர் கற்பகம் சார்பாக, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் பிரபாகர் முறையிட்டார். தஹில் ரமானியின் ராஜினாமா கடிதம் மீது ஜனாதிபதி  இதுவரை முடிவெடுக்காத நிலையில் கொலீஜியம் பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தஹில் ரமானியை மேகாலயாவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க ஜனாதிபதி  செயலருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது.

அப்போது, நீதிபதிகள், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் உயர் நீதிமன்றத்தை நாடியது ஏன் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு, தஹில் ரமானியை இடமாற்றம் செய்து கொலீஜியத்தில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்தது நிர்வாக உத்தரவு என்பதால் உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என வழக்கறிஞர் பிரபாகர் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, மனு பட்டியலிட்ட பின் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story