விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்


விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்
x
தினத்தந்தி 19 Sep 2019 5:08 AM GMT (Updated: 19 Sep 2019 10:51 AM GMT)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கபட்டு உள்ளது.

சென்னை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, திருவள்ளூர் முதல் நாகை வரையிலான வட மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலையிலும் நீடித்தது.

தாம்பரம், பல்லாவரம், சேலையூர் மீனம்பாக்கம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. காலையில் வேலைக்கு செல்பவர்களும், வியாபாரிகளும் மழையில் நனைந்தவாறே சென்றனர்.

குறிப்பாக எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, அடையார், திருவான்மியூர், கிண்டி, மீனம்பாக்கம் போன்ற இடங்களிலும் சென்னை புறநகர் பகுதிகளிலும்  காலையிலும் லேசான மழை தொடருகிறது. இரவு மட்டும் 58 மில்லி மீட்டர் வரை மழை பதிவானதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ., பூண்டியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

கனமழை காரணமாக சென்னை மண்ணடி பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ரெஜினா(50) என்ற பெண் உயிரிழந்தார்.

விடிய விடிய பெய்த கனமழையால் ஐஸ்அவுஸ் பகுதியில் சாலையில் நீர் தேங்கியது, அடைப்பை நீக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என  மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்  என  மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர்.

வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக, ஆந்திர கடலோரத்தை கடந்து தெலுங்கானா வரை நீண்டுள்ளதாகக் கூறிய அவர், இந்த சுழற்சி காரணமாக வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். திருவள்ளூரில் இருந்து நாகை வரையுள்ள வடமாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, கடலில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, எண்ணூர் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. 

Next Story